ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் உடலோடு உயர்த்தவில்லை என்று கூறுகிறான்.


அபூ அப்தில்லாஹ் தன் நூலில் திருக்குர்ஆனில் 4:159 வசனத்தைக் குறிப்பிட்டு பல் ரபஅ ஹுல்லாஹு இலைஹி என்பதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

1. ஈஸா நபி (அலை) அவர்களின் உடலைத்தான் உயர்த்தியுள்ளான்.

2. அதனால் தான் அல்லாஹ் வல்லமை மிக்கவனும் ஞானம் மிக்கவனுமாக இருக்கின்றான். (4:158) என்று திருக்குர்ஆனில் கூறுகிறான்.

3. உடல் உயர்த்தப்படவில்லை, பதவி உயர்வையே குறிக்கும் என்பது அல்லாஹ்வின் வல்லமையைக் குறைத்து மதிப்பதாகும்.

4. வானத்தளவில் மனிதர்கள் உயர்த்தப்படுவதை அவர்களின் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளவில்லையா? ஆகாய விமானத்தில், விண்கலங்களில், ராக்கெட்டில் மனிதன் விண்ணில் பறப்பதை தெரிந்துள்ள காதியானிகள், மனிதன் பூத உடலுடன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்படுவது பகுத்தறிவுக்கு எட்டாது என்று சொல்வது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

5. அல்லாஹ் கையாளாகாதவனாக இந்த காதியானிகள் கருதுகிறார்கள் போலும், குறிப்பாக மனிதனால் சாதித்துக் காட்ட முடிந்ததை அல்லாஹ்வினால் சாதிக்க முடியாது என்று காதியானிகள் விதண்டாவாதம் செய்வது விந்தையாக உள்ளது. (பக்கம் 44)

என்றெல்லாம் எழுதிக் கொண்டு போகிறார்.

நம் பதில்:

மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி) அவர்கள் எழுதிய ஈஸா நபி (அலை) அவர்களின் மரணம் என்னும் நூலில் ரபஅ என்பதன் பொருள் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களுக்கும், எழுப்பிய கேள்விகளுக்கும், திருக்குர்ஆன், ஹதீஸில் இருந்து காட்டிய சான்றுகளுக்கும் அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பதில் தரவேயில்லை. மாறாக ரபஅ என்ற அரபிச் சொல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வேறு பல இடங்களிலும் பதவி உயர்வு குறித்துப் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. என்பதை நான் மறுக்கவில்லை என்று மட்டும் கூறி நழுவி இருக்கிறார். திருக்குர்ஆனில் ரபஅ எனும் சொல் மனிதர்களுடன் தொடர்புடையதாக ஏறக்குறைய 9 இடங்களில் (40:16, 2:254, 43:33, 6:84, 56:4, 58:12, 19:58, 12:101) வருகிறது. அந்த எல்லா இடங்களிலும் பதவி உயர்வு எனும் பொருளைத்தான் கொண்டுள்ளது. உடல் உயர்வு பற்றி எங்கும் வரவில்லை.

மிர்ஸா தாஹிர் (ரஹ்) அவர்கள் தமது நூலில் திருக்குர்ஆனின் ஏனைய இடங்களிலும் ஹதீஸ்களிலும் ரபஅ என்ற சொல் ஆன்மீக உயர்வு என்று பொருள்படும் வண்ணமே கையாளப்பட்டு இருக்கிறது. ஆலிம்கள் கூறுவது போன்று வானத்திற்கு உயர்த்துதல் என்ற அர்த்தத்தில் இச்சொல் எங்குமே பயன்படுத்தப்படவில்லை. (ஆதாரம்: ஈஸா நபி (அலை) அவர்களின் மரணம் பக்கம் 34) என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே ரபஆ என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் தரக்கூடிய ஒரேயொரு சான்றையாவது அபூ அப்தில்லாஹ் திருக்குர்ஆன், ஹதீஸ், அரபி மொழி இலக்கியச் சான்றுகளிலிருந்து காட்டாதவரை (தனது நூலில் அபூ அப்தில்லாஹ் இதற்க்கு பதில் தரவில்லை) ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் என்று கூறும் உரிமையோ, தகுதியோ, அவருக்கு இல்லை.

திருக்குர்ஆனில் ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்களைக் குறிப்பிட்டு அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தினோம் (19:58) என்று அல்லாஹ் கூறியுள்ளான். இவ்வசனத்திலும் ஈஸா (அலை) அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே ரபஅ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அபூ அப்தில்லாஹ் இத்ரீஸ் (அலை) அவர்களுடன் உடலுடன் உயர்த்தப்பட்டுள்ளார்கள் என்று ஒப்புக் கொள்வாரா?

ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்படவில்லை என்றால், அபூ அப்தில்லாஹ் கருத்துப்படி அல்லாஹ்வின் வல்லமையை குறைத்துக் கணிப்பது ஆகாதா? இருவருக்கும் ஒரே சொல் பயன்படுத்தப்பட்டிருக்க ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மட்டும் உடலோடு உயர்த்தப்பட்டதாக பொருள் கூற முடியுமா? (4:158) வது வசனத்தில் ரபஅ என்பதற்கு ஈஸாவை உடலோடு உயர்த்தி உள்ளான். எனவேதான் அல்லாஹ் வல்லமைமிக்கவனும் ஞானமிக்கவனுமாக இருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் எழுதியுள்ளார்.

திருக்குர்ஆன் வல்லமைமிக்கவன் என்று மட்டும் கூறவில்லை. ஞானமிக்கவன் என்றும் சேர்த்துக் கூறியுள்ளது. இவ்வாறு எங்கெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கின்ற போது அபூ அப்தில்லாஹ்வின் கருத்து பொருத்தமற்றதாகவே தெரியவரும். திருக்குர்ஆன் 39:43 இல் அல்லாஹ் உயிர்களை மரணத்தின் போதும் தூக்கத்தின் போதும் கைப்பற்றுகிறான் என்று கூறுகிறான். இதில் உயிர்கள்தான் கைப்பற்றப்படுவதாக இறைவன் கூறுகிறான். உடல்கள் அன்று. எனவே எது கைப்பற்றப்படுகிறதோ அதுதான் உயர்த்தப்படும்.

மேலும் ரபஅ என்ற சொல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் அல்லாஹ் ஒரு மனிதருடன் தொடர்புப்படுத்திக் கூறும் இடங்களில் எல்லாம் ஆன்மீக உயர்வு  பதவி உயர்வு என்னும் பொருளில் வந்துள்ளதே தவிர உடலை உயர்த்துதல் என்று எங்கும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் ஒரே ஒரு சான்றையாவது அபூ அப்தில்லாஹ் காட்டட்டும். எனவே திருக்குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் மாற்றமாக உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் கொடுப்பது அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் செய்கின்ற அவமதிப்பாகும்.

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் எனபதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் மற்றொரு காரணம் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறையவுமில்லை; கொல்லவுமில்லை என்றால் அவர்கள் என்ன ஆனார்கள் என்ற வினா எழும்? அப்படியாயின், ரபஅஹுல்லாஹ் இலைஹி(4:158). ஆனால், அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று குறிப்பிடுவது ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களின் உடலைப் பற்றியதாகத்தான் அல்லாமல் நிச்சயமாக அவரது ஆன்மாவைப் பற்றியதாகவோ ஆன்மீகப் பதவியைப் பற்றியதாகவோ இருக்க முடியாது என்று அபூ அப்தில்லாஹ் எழுதியுள்ளார். (பக்கம் 15,16)

ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களைச் சிலுவையில் அறையவும் இல்லை; கொல்லவுமில்லை என்று அல்லாஹ் கூறுவதனால் அவர் இறக்கவே இல்லை என்று அபூ அப்தில்லாஹ் கருதுகிறார் போலும். அதனால்தான் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்று தெரிகிறது. உலகில் எல்லா மனிதர்களுக்கும் இறப்பு என்பது சிலுவையில் அறையப்படுவதன் மூலமோ அல்லது கொல்லப்படுவதன் மூலமோ மட்டும் ஏற்படுவது என்றால் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் இந்த இரண்டு  வழிகளில் இறக்காததினால், அவர் மரணமடையவில்லை என்று கருதலாம். அப்படியில்லாமல் இறப்பது என்பது இயற்கையாகவும் வேறு வழிகளிலும் வருகிறது. எனவே ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் கொல்லப்பட்டோ சிலுவையில் அறையப்பட்டோ இறக்கவில்லையே தவிர பிற வழிகளில் அதாவது இயற்கையாகவோ அல்லது வேறு வழிகளிலோ மரணித்திருக்கலாம் அல்லாவா?

அப்படியென்றால் அல்லாஹ் ஏன் அவ்வாறு சிலுவையில் அறையப்பட்டோ கொல்லப்பட்டோ இறக்கவில்லை (வமா கத்தலூஹு வமா சலபூஹு) என்று கூறினான். திருக்குர்ஆனில் வசனங்களை விளங்குவதற்கு சில அடிப்படை கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது திருக்குர்ஆன் தன் காலத்திற்கு முன்னர் உலகில் நிலவி வந்த தவறான கருத்துகளில் அல்லாஹ், நபிமார்கள் போன்றவர்களோடு சம்பந்தப்பட்ட அவசியமான கருத்துகளை மறுத்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக திருக்குர்ஆன் 5:73-76இல்நிச்சயமாக மர்யமின் மகன் மஸீஹ் அல்லாஹ்தான் என்று கூறுபவர்கள் திட்டமாக நிராகரிப்பவர்களாவர்..... அல்லாஹ் மூவருள்  ஒருவன் என்று கூறியவர்கள் நிராகரித்துவிட்டனர்.....

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார்.

இந்த வசனங்கள் இறைவனைப் பற்றியும் ஒரு நபியைப் பற்றியும் நபியின் தாயாரைப் பற்றியும் யூத, கிறிஸ்தவ மக்கள் கொண்டிருந்த தவறான கருத்துகளை எடுத்துக்காட்டி அதனை மறுக்கக்கூடிய வசனங்களாகும். அதாவது ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் ஆண் தொடர்பின்றி ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பெற்றதால் மக்கள் அவர்களை (நவூதுபில்லாஹ்) விபச்சாரி என்றும், ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை (நவூத்பில்லாஹ்) விபச்சார புத்திரன் என்றும் கடுமையான அவதூறு கூறினார். எனவே அல்லாஹ் மக்களின் அவதூறை மறுக்கும் விதமாகத்தான் ஹஸ்ரத் ஈஸா(அலை) மற்றும் அவரது தாயாரைப் பற்றி மேற்சொன்ன வசனத்தில் குறிப்பிடுகிறான்.

அதேபோன்று ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்ததாகவும் மற்றும் பிற வகையில் கொன்று விட்டதாகவும் யூதர்கள் நம்பியிருந்ததால் அவர்களுடைய அந்த தவறான நம்பிக்கையை மறுக்கும் விதமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டதனாலோ பிற வகையிலோ கொல்லப்படவில்லை என்று அல்லாஹ் வசனம் 4:158 இல் குறிப்பிடுகின்றான். சிலுவையில் அறைந்து கொல்லுதலை தவ்ராத் வேதம் சபிக்கப்பட்டமரணமாகக் கூறுவதனால் ஈஸா நபி (அலை) அவர்கள் அப்படிப்பட்ட சபிக்கப்பட்ட மரணத்திற்கு ஆளாகவில்லை என்றும், அன்னாரது ருஹ் இறைவனளவில் உயர்த்தப்படும் அளவுக்கு புனிதமானது என்றும் காட்டுவதற்குத்தான். ரபஅ என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவ்வாறு அவர் கொல்லப்படவில்லை என்று கூறுவதனால் அவர் இறக்கவே இல்லை. உயிரோடு இருக்கிறார் என்று கருதுவது தவறாகும். எப்படியென்றால் ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் ஒரு நேர்மையான பெண்ணாக இருந்தார் என்று திருக்குர்ஆன் கூறியிருப்பதனால், மற்ற நபிமார்களின் தாய்மார்கள் அவ்வாறு நேர்மையான பெண்களாக இருக்கவில்லை என்று கருதலாமா? இந்த இடத்தில் நான் முன்பு கூறியபடி யூதர்கள் ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்களை விபச்சாரி (நவூதுபில்லாஹ்) என்று கூறியதனால் அதை மறுக்கும் விதத்தில் திருக்குர்ஆன் அவரை ஒரு நேர்மையான பெண் என்று கூறுகிறது. இவ்விடத்தில் யூதர்களின் குற்றச்சாட்டை மறுக்கும் விதத்தில் அவருடைய நேர்மையை எடுத்துக் காட்டப்படுகிறதே தவிர அதனால் மற்ற நபிமார்களின் தாய்மார்கள் நேர்மையான பெண்கள் இல்லை என்று குறைத்து மதிப்பிடுவதாக பொருளாகாது. அதுபோன்று ஒரு அவதூறு பிற நபிமார்களின் தாய்மார்கள் மீது சுமத்தப்படவில்லை என்பதாலும், ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதாலும் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறே யூதர்கள் ஈஸா (அலை) அவர்களுடைய மரணம் பற்றி தவறாகக் கூறிய கருத்துகளை மறுக்கும் விதத்தில் தான் சிலுவையில் அறையப்பட்டோ கொல்லப்பட்டோ அவர் இறக்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர அவர் இறக்கவில்லை என்ற பொருளில் அல்ல.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உட்பட எந்த நபியும் சிலுவையில் அறையப்படவில்லை; கொல்லப்படவில்லை என்பதனால் அவர்கள் இறக்கவில்லை என்றோ உடலோடு உயர்த்தப்பட்டார்கள் என்றோ சொல்ல முடியாது. ஏன் ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை; கொல்லப்படவில்லை. அப்படியிருக்க அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தினோம் என்று இறைவன் கூறியதனால் அவர் உடலோடு உயர்த்தப்பட்டு உயிரோடு இருக்கிறார் என்று அபூ அப்தில்லாஹ் ஒப்புக் கொள்வாரா?

எல்லாவற்றிற்கும் மேலாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் மக்கத்துக் காபிர்கள் சில செயல்களைச் செய்து காட்டுமாறு கேட்டார்கள். அவற்றுள் ஒன்று நீர் இந்த உடலோடு வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும். திரும்பி வரும்போது நாங்கள் வாசிக்கத்தக்க ஒரு நூலைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டதற்கு அல்லாஹ் தன் தூதரிடம் பதில் கூறுமாறு கூறிய வசனங்கள் சிந்தனைக்குரியவையாகும்

என் இறைவன் தூயவன்; நான் ஒரு மனித ரேஸுலேயன்றி வேறில்லை.(17:94)

திருக்குர்ஆன் இந்த வசனத்திலிருந்து உடலோடு ஒரு மனித ரெஸுல் வானத்திற்கு ஏறிச் செல்வது அல்லாஹ்வின் தூய்மைக்கு மாறானதும், ஒரு மனித ரெஸுல் அவ்வாறு வானத்திற்கு ஏறிச் செல்லமுடியாது என்பதும் தெளிவாக விளங்குகிறது. இந்த வசனத்திற்கு மாற்றமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் என்று நம்புவது அல்லாஹ்வின் பரிசுத்த தன்மைக்கு களங்கம் கற்பிப்பதாகும். ஏனெனில் ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் வானத்திற்கு உடலுடன் சென்று விட்டார் என நம்பினால் இந்த வசனத்தின்படி அவர் மனிதனோ, ரஸுலோ இல்லை. மாறாக கிருஸ்தவர்கள் நம்புவது போல் அவர் கடவுளோ, கடவுளின் குமாரரோ ஆவார் என நம்புவதாகிவிடும். மாறாக, வசனம் 17:94 இல் தர்கா என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. உடலோடு வானத்திற்கு ஏறிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் தர்கா என்ற சொல் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைக் குறித்து திருக்குரானில் பயன்படுத்தப்படவில்லை. எனவே ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுடன் பயன்படுத்தப்பட்ட ரபஅ என்ற சொல் உடலோடு உயர்த்தப்படுதல் எனும் பொருளை தராது. எனவே அவர் உடலோடு உயர்த்தப்படவில்லை என்று விளங்கிக் கொள்ளலாம்.

அபூ அப்தில்லாஹ் ஈஸா நபி (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்படவில்லை என்று நாம் கூறுவது அல்லாஹ்வின் வல்லமையை மறுப்பது எனவும் அல்லாஹ்வை கையாளாகாதவன் என்று கருதுவதாகவும் தம் நூலில் எழுதியுள்ளார்.

அல்லாஹ், எல்லாம் வல்லவன் என்ற பண்பின் மீதும் அவனுடைய பிற பண்புகள் எல்லாவற்றின் மீதும், அஹ்மதி முஸ்லிம்களாகிய நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டுள்ளோம் என்பதை அல்லாஹ்வின் படைப்பினங்கள் எத்தனை உண்டோ அத்தனை முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்.

அல்லாஹ்வுக்கு எல்லாம் வல்லவன் என்ற ஒரு பண்பு இருப்பது போல் அவர் பரிசுத்தமானவன் என்ற பண்பும் உள்ளது. எனவே ஒன்றை தவறாகப் புரிந்து கொண்டு இன்னொன்றை மறுப்பது ஒரு வகை குப்ர் ஆகும். அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உடலோடு உயர்த்துவதற்கு சர்வ வல்லமையுள்ள இறைவனால் முடியுமென்றாலும் அவ்வாறு செய்வது அல்லாஹ்வுடைய பரிசுத்தத் தன்மைக்கு மாற்றம் என்று (17:94) இறைவன் கூறியுள்ளான்.

எப்படியென்றால் ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களை அவருடைய எஜமானி என்னருகே வா என்று தவறான செயலுக்கு அழைத்த போது அவர் பயந்து ஓடுகிறார். அந்தப் பெண் அவரை விரட்டுகிறார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இச்சம்பவத்தை வைத்துக் கொண்டு யூசுப் (அலை) அவர்கள் ஆண்மை இல்லாதவர் என்று கருத முடியுமா? அந்த இடத்தில் இறை அச்சமும் பாவத்தைப் பற்றிய அருவருப்பும் அவருடைய நேர்மையும் அச்செயலில் ஈடுபடாதவாறு அவரை தடுத்தது. ஒரு நபி அத்தகைய செயலைச் செய்யமாட்டார். எனவே ஒருவரால் செய்ய முடியும் என்பது வேறு. செய்யமாட்டார் என்பது வேறு என்பதை அபூ அப்தில்லாஹ் போன்றோர் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவரை உடலோடு உயர்த்த அல்லாஹ்வால் முடியும். ஆனால் அவனுடைய பரிசுத்தத் தன்மைக்கு மாற்றம், களங்கம்  என்பதால் இறைவன் அவ்வாறு செய்யமாட்டான்; செய்யவில்லை.

இவ்வாறு அஹ்மதி முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புவதால் அல்லாஹ்வின் வல்லமையை நாங்கள் மறுத்ததாகி விடும் என்று கூறுவதாக இருந்தால் அபூ அப்தில்லாஹ் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கிறோம்.

1. ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களையும் அவரது தாயாரையும் இரு கடவுள்களாகப் படைக்க அல்லாஹ்வுக்கு வல்லமை உண்டா? இல்லையா?

2. இறைவன் தனக்கென சந்ததிகளை உருவாக்க  வல்லமை உண்டா? இல்லையா?

3. அல்லாஹ் மலக்குகளை பெண் மக்களாக படைக்க வல்லமை உண்டா? இல்லையா?

இதற்கு அபூ அப்தில்லாஹ் என்ன பதில் கூறுவார்?

இவை போன்ற இடங்களில் திருக்குர்ஆன் கூறுவது போல் அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கும் தவ்ஹீதுக்கும் மாற்றம் என்பதால் இறைவன் செய்யவில்லை என்று விளங்குகிறது. அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியும் என்பது வேறு; செய்யமாட்டான் என்பது வேறு. இரண்டையும் குழப்பக் கூடாது. ஒன்று, அல்லாஹ்வுடைய வல்லமை. மற்றொன்று அல்லாஹ்வுடைய பரிசுத்தத் தன்மை.

மேலும் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹ்) அவர்கள் தம் நூலில் (இரண்டாம் பதிப்பில்) பக்கம் 27 இல் கேட்டுள்ள வினாக்களுக்கு அபூ அப்தில்லாஹ் அவர்கள் பதில் தரவில்லை. எனவே அவ்வினாக்களை சுருக்கமாக இங்கே மீண்டும் எழுப்புகிறோம்.

“ஓர் அடியான் இறைவனுக்காக தாழ்மைக் குணத்தை மேற்கொண்டால் இறைவன் அவரை 7 ஆம் வானத்திற்கு உயர்த்திவிடுவான்.” (கன்ஸுல் உம்மால்)

இந்த நபிமொழியில் வரும் ரபஅ என்னும் சொல்லைக் காரணம் காட்டி தழ்மைக்குணம் உள்ளவனை இறைவன் உடலோடு வானத்திற்கு உயர்த்துவான் என்று பொருள் கூறுவாரா? அவ்வாறு யாரும் கூற மாட்டார்கள். இப்படி பொருள் கூறுவது என்றால் ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் மட்டும் என்ன? எல்லா நபிமார்களும், வலிமார்களும், தழ்மைக்குணம் கொண்ட அத்தனை நல்லடியார்களும் உடலோடு வானிற்கு உயர்த்தப்பட்டு அங்கு வாசம் செய்வதாக நம்ப வேண்டும்.

ஐவேளைத் தொழுகையை கடைபிடிக்கிறவர்கள் தொழுகையின் போது ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் வர்பஹ்னி (இறைவா) என்னை உயர்த்துவாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். உடலுடன் வானிற்கு உயர்த்துவது இதற்குப் பொருள் என்றால் வாழ்நாள் எல்லாம் தொழுது வந்த ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் இவ்வாறு செய்து வந்த பிராத்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றல்லவா கூற வேண்டி வரும்? ஏனென்றால் இவ்வாறு பிராத்தனை செய்த எவரும் உடலுடன் வானிற்கு உயர்த்தப்படவில்லையே. எனவே இந்தப் பிராத்தனையின் பொருள் என்னுடைய நிலையை உயர்த்துவாயாக என்பதே தவிர வேறொன்றும் இல்லை.

இந்த வினாக்களுக்கு அபூ அப்தில்லாஹ் எங்கும் பதில் தரவில்லை. ஒருவேளை ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு வந்தது போன்ற ஒரு சூழ்நிலை வேறு யாருக்கும் வரவில்லை. வந்திருந்தால் அவர்களும் இறைவன் அளவில் உடலோடு உயர்த்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணி பதில் தரவில்லையோ அல்லது பதில் தர முடியாத நிலையோ? அல்லாஹ் அறிவான்.

அப்படி ஒரு காரணமும் அவர் காட்ட முடியாது. ஏனென்றால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கோ அவர்களின் தலைக்கு 100 ஒட்டகம் விலை வைக்கப்பட்ட நேரத்திலும் அல்லாஹ் அவர்களை உடலோடு உயர்த்தி தன்னளவிலோ, ஏழாவது வானத்திலோ, குறைந்தபட்சம் மதீனாவிலோ கொண்டு வைக்கவில்லையே! அல்லாஹ் கையாளாகாதவன் (நவூதுபில்லாஹ்) என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா? அல்லது அல்லாஹ் பாரபட்சமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்கு ஒருவிதமாகவும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருவிதமாகவும் செய்துவிட்டான் என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா?

அல்லாஹ்வின் நடைமுரையில் ஒருபோதும் மாற்றமில்லை (குர்ஆன் 33:63) மேலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் சூரா பாத்திகாவில் செய்த “ இறைவா நீ அருள் புரிந்தவர்களின் வழியில் (நீ எங்களை) நடத்துவாயாக” என்ற துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை ஹிஜ்ரத் செய்த வேளையில் எதிரிகளிடமிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான் என்றால் அதுதான் அல்லாஹ்வின் வல்லமையாகும்; நடைமுறையுமாகும். அதாவது தவ்ர் குகையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும், ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களும் ஒளிந்திருந்த போது அல்லாஹ் அவர்களை காப்பாற்றி மதீனா கொண்டு சேர்த்தான். அவர்கள் குகையில் இருக்கும் போது, எதிரிகள் பலர் குகைக்கு வெளியே நின்று கொண்டிருக்க ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நாம் இருவர் தானே இருக்கிறோம். எதிரிகள் பலர் இருக்கின்றனரே! என்று கேட்க அதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரே! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான். என்று பதில் கூறினார்கள்.

அந்தக் குகையில் அல்லாஹ் அவர்களுடன் இருந்தான். அல்லாஹ் அவர்களை உடலுடன் தன்னளவில் உயர்த்திக் கொள்ள வில்லை. மாறாக அவன் அந்த மாநபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வும் இருந்தான். இதுவே அல்லாஹ்வின் நடைமுறையாகும்.

இவ்வாறுதான் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களும் காப்பாற்றப்பட்டார்கள் என்று நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம். இதிலிருந்து திருக்குர்ஆன் நபி மொழிகளின் அடிப்படையில் அல்லாஹ்வின் வல்லமையை சரியாக மதிப்பிட்டு யார் நம்பிக்கை கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.  

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்?


"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒரு உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தோம்." (திருக்குர்ஆன் 23:51)

இந்த வசனத்தில் அல்லாஹ் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களையும் அவர்களது தாயார் மர்யம் (அலை) அவர்களையும் "அல்லாஹ் உயிருள்ளவன். வல்லமையுள்ளவன்" என்பதை நிரூபிப்பதற்கான ஓர் அடையாலமாக்கினான் என்பது தெரிய வருகிறது. மேலும் ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கு அவர்களது எதிரிகள் அதிகமாக துன்பங்கள் கொடுத்தபோது அல்லாஹ் அவர்களையும் அவரது தாயாரையும் எதிரிகளின் தீமையிலிருந்து காப்பாற்றி தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் வாழச் செய்தான் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் குறிப்பிட்டுக் கூறியுள்ளான்.
மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு அஹ்மதிய்யா இயக்கத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்கள் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

மேற்குறிப்பிட்ட வசனத்தில் "ஆவைனாஹுமா" "அவ்விருவருக்கும் நாம் தஞ்சமளித்தோம்" என்ற சொல் வந்துள்ளது. ஒருவரை மற்றொருவர் ஏதாவதொரு துன்பத்திளிருந்தோ, கவலையிளிருந்தோ காப்பாற்றி உதவி புரிவதைக் குறிப்பிடுவதற்கே அரபி மொழியில் "ஆவா" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. திருககுரானில் ஹஸ்ரத் ரசூல்(ஸல்) அவர்களைப் பார்த்து "அவன் உம்மை அநாதையாகக் கண்டு (தன் நிழலில் உமக்குப்) புகலிடம் அளிக்கவில்லையா?" (93:7) என்று இறைவன் கேட்கின்றான்.

இந்த வசனத்திலும் "ஆவா" என்ற சொல் மேற்குறிப்பிடப்பட்டுள்ள பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது "நீர் உமது தாயாரின் கருப்பையில் இருக்கும் போதே உமது தகப்பனார் இறந்து விட்டார். பின்னர் நீர் அநாதையாகி விட்டதைக் கண்ட இறைவன் தானாகவே உமது கருணையின் நிழலில் உமக்கு அடைக்கலம் வழங்கினான்" என்பதையே ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறியுள்ளான்.

"ஆவா" என்ற சொல் திருககுரானில் இதே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இன்னும் சில உதாரணங்களைக் கீழே தருகிறோம்.

"நீங்கள் சிறுபான்மையினராக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பூமியில் நீங்கள் பலவீனமாகக் கருதப்பட்டீர்கள். மக்கள் உங்களைப் பிடித்துச் சென்று விடுவார்களோ என்று பயந்தீர்கள். அவ்வாறிருந்தும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்தான். தன் உதவியினால் உங்களை உறுதிப் படுத்தினான். மேலும், தூய்மையானவற்றிலிருந்து உங்களுக்கு உணவு வழங்கினான். (8:27) அல்லாஹ் இந்த வசனத்தில் "ஆவா" என்ற சொல்லை ஒரு பெரும் துன்பத்திற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு அவன் மதீனாவில் அடைக்கலம் வழங்கி உதவி செய்த சந்தர்ப்பத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தியுள்ளான்.

அவ்வாறே வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்ட சமயத்தில் ஹஸ்ரத் நூஹ் (அலை) தமது மகனிடம் "எனது மகனே! எங்களுடன் நீயும் கப்பலில் ஏறிக்கொள்" எனக் கூறிய போது அவன் "நான் இப்பொழுது இந்த வெள்ளத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ஏதாவதொரு மலையைச் சென்றடைந்து தங்கிக் கொள்வேன்" (11:44) என்று பதில் கூறுவதாக வரும் திருக்குர்ஆன் வசனத்திலும் "ஆவா" என்ற சொல் மேற்குறிப்பிடப்பட்ட பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களுடன் பிறந்த அவர்களது சகோதரர் புன்யாமீன் மீது அவர்களது மற்ற சகோதரர்கள் பெரும் பெரும் கொடுமைகளை இழைத்ததால் அவர்கள் மிகுந்த துயரத்துடன் தமது நாட்களைக் கழித்து வந்தார்கள். ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களிடம் அவர் திரும்பி வந்தபோது தனது சகோதரருக்கு பெரும் துயரத்திலிருந்து அவர்கள் அடைக்கலம் வழங்கியது பற்றி திருககுரானில் இவ்வாறு வந்துள்ளது:

"அவர்கள் யூசுபிடம் சென்றபோது, அவர் தம் சகோதரரை தம் பக்கத்தில் இடமளித்து (அவரிடம்) நிச்சயமாக நானே (காணாமற் போன) உம்முடைய சகோதரன். எனவே, இவர்கள் செய்து கொண்டிருப்பது குறித்து நீர் கவலையடைய வேண்டாம்" என்றார். (12:70)

"ஆவா" என்ற சொல் மேற் குறிப்பிடப்பட்ட பொருளில்தான் இந்த வசனத்திலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அரபி அகராதியின்படி "ஆவா இலா மன்சிலிஹா" என்று கூறினால் அது அமைதியற்ற ஓர் இடத்திலிருந்து அமைதியான ஓர் இடத்திற்கு ஒருவர் வந்து சேர்ந்ததைத்தான் குறிப்பிடும். இந்தப் பொருளில்தான் "அல்லாஹும்ம ஆவா இலா ஸில்லி கரமிக வ ஆஃபிக" எங்கள் இறைவா! உனது கருணை, மன்னிப்பு ஆகியவற்றின் நிழலில் எனக்கு அடைக்கலம் வழங்குவாயாக" என்று நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம் . (ஆதாரம் அரபி அகராதி நூல் "அகரப்" )

எனவே திருக்குரானின் (23:51) வசனம் அல்லாஹ் ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கும் அவர்களது தாயாருக்கும் ஒரு பெரும் துன்பத்திலிருந்து இரட்சிப்பை வழங்கி இவ்வுலகிலேயே அவ்விருவருக்கும் தங்குவதற்கேற்றதும்  நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தான். என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில், "ஆவா" என்ற சொல்லின் பொருள் "அவன் துன்பத்திலிருந்து இரட்சிப்பை வழங்கி அடைக்கலம் தந்தான்" என்பது மட்டுமேயாகும்.

வரலாற்றைக் கவனமாகப் பார்க்கும் போது ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கும், அவரது தாயாருக்கும் அடைக்கலம் தேவைப்படும் அளவில் சிலுவை சம்பவத்திற்கு முன்பு எந்த ஒரு பெருந்துயரமும் எந்தக் காலக் கட்டத்திலும் வரவில்லை என்பது தெளிவாகத் தெரியும். சிலுவை சம்பவம்தான் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கும் அவரது தாயாருக்கும் கடுமையான துன்பத்தைத் தந்தது. இறைவன் தனது அளவற்ற அருளால் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை சிலுவை மரணத்திலிருந்து காப்பற்றி இருப்பதால் அவர்கள் வேறொரு நாட்டிற்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டியது அவசியமானதாக இருந்தது. ஏனெனில், ஸாம் நாடு ரோமானிய அரசுக்குக் கீழிருந்ததால் ரோம் நாட்டு மன்னர் கிசருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்தனர்.

ஹஸ்ரத் ஈசா (அலை) அதே நாட்டில் தொடர்ந்து வாழ்ந்து வந்தால் நிச்சயமாக அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு அவர்கள் தமது நாட்டை விட்டு இடம் பெயர்ந்து வேறு நாட்டிற்கு செல்ல கட்டளையிட்டான். வரலாற்று சாட்சிகளின்படி இந்த இடம் காஷ்மீர்தான். என்பது தெரிய வந்துள்ளது. இந்த பகுதி நீரூற்றுகளும் செழிப்பான தோட்டங்களும் நிறைந்த அழகிய சூழலைக் கொண்ட நகரமாக இருப்பதால் இதனை சொர்க்கத்திற்கு இணையாக மக்கள் புகழ்ந்து கூறுகின்றனர். மேலும் "காஷ்மீர்" என்ற சொல்லே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் காஷ்மீர் பயணத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

ஏனெனில், காஷ்மீரிய மொழியில் "காஷ்மீர்" என்பதற்கு பகரமாக "கஸீர்" என்றுதான் காஷ்மீர் அழைக்கப்படுகிறது. இது உண்மையிலேயே ஒரு எபிரேய மொழியின் சொல்லாகும். "காஃப்" என்ற சொல்லும் "அஸீர்" என்ற சொல்லும் இணைந்தே இந்தச் சொல் உருவாகியுள்ளது. "காஃப்" என்ற சொல்லின் பொருள் "அதைப் போன்றது" என்பதாகும். எபிரேய மொழியில் "அஸீர்" என்றால் ஸாம் நாடு என்பதுதான் அதற்குப் பொருள். எனவே, கஸீர் என்பதன் பொருள் "ஸாம் நாட்டைப் போன்றது" என்பதாகும். காஷ்மீரிய மொழியில் காஷ்மீருக்கு "கஸீர்" என்றுதான் இன்றும் கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. காஷ்மீரில் வாழ்பவர்களை காஸ்மீரில் உள்ளவர்கள் "காஸீர்" என்றே அழைக்கின்றனர்.

எபிரேய சமுதாயத்தினர் காஷ்மீரில் வாழ்ந்தனர் என்பதற்கு "காஷ்மீர்" என்ற சொல் மட்டும் சான்றாக இல்லை. மாறாக, வரலாற்று நூல்களிலிருந்தும் இன்றிலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேல் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நபி காஷ்மீர் வந்திருந்தார் என்றும் அவர் இஸ்ரவேல் சந்ததியிலிருந்து தோன்றியவர் என்றும் அந்த நபி இளவரசர் என்று அழைக்கப்பட்டார் என்பதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது கல்லறை கான்யார் வீதியில் உள்ளது. அது யூஸ் ஆஸப்பின் கல்லறை என்றே பிரபலமாகியுள்ளது. இந்தச்சொல் "இயே ஆஸப்" என்ற சொல்லிலிருந்து வந்த திரிபு சொல்லாகும். இதனை அஹ்மதியா இயக்கத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) தமது ஒரு நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

எபிரேய மொழியில் "ஆஸிப்" என்ற சொல் தமது சமுதாயத்தைத் தேடிச் செல்பவரைக் குறிக்கும். மேலும் "யூஸ்" என்ற சொல் "இயேசு" என்ற சொல்லின் திரிபு சொல்லாகும். ஈசா (அலை) அவர்களுக்கு இந்தப்பெயர் வைக்கப்பட்டதன் காரணம் அவர்கள் பஹதே நஸர் என்ற மன்னரின் காலத்தில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பத்து இஸ்ரவேல் கோத்திரத்தினரை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு இறைவனின் தூதுச்செய்தியை எட்ட வைக்கப் பயணம் மேற்க்கொண்டதேயாகும். பஹதே நஸர் என்ற மன்னர் அந்த இஸ்ரவேல் கோத்திரத்தைச் சார்ந்தவர்களை அடிமைகளாக்கி அவர்களை அப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும் குடியேறச் செய்தார்.

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் தனது வருகையின் நோக்கம் குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்கள் :

'காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே அன்றி மற்றபடியல்ல' (மத்தேயு 15:24)

'இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே எனக்கு ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். (யோவான் 10:16)

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் தமது சீடர்களுக்கு ஒரு முறை தனது தூதுச் செய்தியை பரப்புவது குறித்து அறிவுரை கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்கள்:

'நீங்கள் புற ஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். ' (மத்தேயு 10:4,5)

இந்த மேற்கோள்களிலிருந்து பாலஸ்தீனத்தில் வாழும் யூதர்களுக்கு ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எவ்வாறு இறை தூதுச் செய்தியை எட்ட வைத்தார்களோ அவ்வாறே கிழக்கத்திய நாடுகளிலும் வாழும் யூதர்களுக்கும் இறைவனின் தூதுச் செய்தியை எட்டவைப்பது அவர்களது கடமையாக இருந்தது. அந்த யூதர்களும் அவர்களது குரலை ஏற்று நடக்க வேண்டியிருந்தது. ஏனெனில், ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் கூற்றுப்படி பாலஸ்தீனத்தின் ஆடுகளிலிருந்தும் அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள் மிகவும் குறைவானவர்களாவார்கள். ஆனால், மற்ற ஆடுகள் அவரது குரலைக் கேட்டதும் மிக விரைவில் ஒன்று கூடிவிடும் நிலையில் இருந்தன.

இந்த முன்னறிவிப்புகளுக்கேற்ப அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுத்தான். முதலில் பாலஸ்தீனத்தில் அவர்களுக்கெதிராக எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில் அரசாங்க தரப்பிலிருந்து நாட்டிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர்கள் மீது தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால் அல்லாஹ் எவ்வாறு யோனாதீர்க்கதரிசியை மரணத்தின் வாயிலிருந்து காப்பாற்றினானோ அவ்வாறே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களையும் சிலுவை மரணத்திலிருந்தும் காப்பாற்றினான். ஏனென்றால் இதற்குப் பிறகு அவர்கள் தமது நாட்டில் இருக்க முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதற்க்கான காரணம் எவரைக் குறித்து அரசாங்கம் ஒருமுறை அவரை சிலுவையிலேற்றி கொள்ள வேண்டும் என தீர்மானித்து விடுகிறதோ அப்படிப்பட்டவர் தப்பித்துச் சென்றாலும் அவர் மீண்டும் பிடிபடும்போது அவர் கொல்லப்படுவது உறுதி. எனவே, ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் அந்த நாட்டைத் துறந்தார்கள். பாலஸ்தீனத்தை விட காஷ்மீர், ஆப்கனிஸ்தான் ஆகிய பகுதியிலுள்ள வழி மிகவும் அபாயகரமானதாக இருந்தது. என்றாலும், அவர்கள் இடம்பெயர்ந்து இந்த நாடுகளுக்கு வந்தார்கள்.

திருக்குர்ஆன் கூறுவது போன்று தங்குவதர்க்கேற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான காஷ்மீரைத்தான் அல்லாஹ் அவர்கள் இடம்பெயர்ந்து செல்லும் இடமாக்கினான். அவர்கள் அங்கு எவ்வித இடையூறுமின்றி சமாதானத்துடனும் சுகத்துடனும் தங்கி வாழ்ந்து வந்தார்கள். காஷ்மீரில் நீரூற்றுகள் மட்டுமின்றி இந்தப் பகுதி தனது குளிர்ச்சியிலும் செழிப்பிலும் ஸாம் நாடு போன்று இருந்ததால் அங்குச் சென்றதும் அவர்களது எல்லாத் துன்பங்களும் நீங்கி விட்டன. அவர்கள் தமது 120 வது வயது வரை இறைவனின் தூதுச் செய்தியை மக்களுக்கு எட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அங்கேயே மரணித்தார்கள். பின்னர் ஸ்ரீ நகரிலுள்ள கான்யார் பகுதியில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இன்று வரை அவர்களது கல்லறை அங்கு இருந்து வருகிறது. ( தப்ஸீரே கபீர் பாகம் 6 பக்கம் 175 லிருந்து 179 வரை)

ஈசா நபி (அலை) அவர்களின் மரணம் - P.J தவறான விளக்கத்திற்கு மறுப்பு


திருக்குர்ஆன் விளக்கம் - ஈசா (அலை) வருகை என்னும் தலைப்பில் பி. ஜைனுலாப்தீன், (16-11-2001) ஒற்றுமை இதழில் 45 ஆம் பக்கத்தில் எழுதப்பட்ட திருக்குரானின் தவறான விளக்கத்திற்கு இங்கு விளக்கம் தரப்படுகிறது.

மௌலவி பி.ஜைனுலாப்தீன்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுளர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் கூறும்போது, நீ தூயவன். எனக்கு உரிமை இல்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிவாய். என் மனதில் உள்ளதை நீ அறிவாய். உன் மனதில் உள்ளதை நான் அறியமாட்டேன் நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என நீ எனக்கு ஆணையிட்டதைத் தவிர (வேறு) எதனையும் அவர்களிடம் நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தபோதெல்லாம் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய். நீ ஒவ்வொரு பொருளையும் பார்க்கக்கூடியவனாக இருக்கின்றாய் ......... என்று திருக்குர் ஆனின் (5:116,117,118) வசனங்களுக்குப் பொருள் எழுதியுள்ளார். மேலும், மரணிக்க செய்தல் என்பது எவ்வாறு தவஃபா வின் பொருளாக இருக்கிறதோ அதுபோலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக்குரிய பொருள் தான்.

"உயிர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின்போதும் கைப்பற்றுகிறான்." (39:42) இந்த இடத்தில் கைப்பற்றுகிறான் என்றுதான் அதே சொல்லுக்கு பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை. (பக்கம் 47) அவன்தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான். (6:60)

இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று பொருள் இல்லை தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாக உள்ளது. (பக்கம்,47) என்றும் எழுதியுள்ளார்.

என் விளக்கம்: திருக்குரானின் வசனத்தைப் பாருங்கள்,

"அல்லாஹ் மக்களின் உயிர்களை அவர்களின் மரணத்தின் போதும், மரணமடையாதவர்களின் உயிர்களை அவர்களின் தூக்கத்தின் போதும் கைப்பற்றுகிறான்."

மக்களின் உயிர்கள் இரண்டு வகைகளில் கைப்பற்றப்படுகிறது. என்று இவ்வசனம் கூறுகிறது.

மரணத்தின்போது

தூக்கத்தின்போது

உயிர்களை நிரந்தரமாக கைப்பற்றுதலுக்கு மரணம் என்றும், ரூஹை தற்காலிகமாக கைப்பற்றுதலுக்கு உறக்கம் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

எனவேதான் இவ்வசனத்தில் தொடர்ந்து "பின்னர் மரணம் முடிவாகிவிட்டவற்றை தன்னிடம் நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றை (அதாவது தூக்கத்தில் கைப்பற்றப் பட்டவற்றை) குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு திருப்பி அனுப்பிவிடுகின்றான். சிந்தனை செய்யும் மக்களுக்கு நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன" என்று கூறியுள்ளான்.

இவ்வாறு அல்லாஹ் ஒருவனை தவப்பா செய்தான் என்றால் அதற்க்கு ரூஹை(உயிரை) கைப்பற்றிக் கொண்டான். - அவனை மரணமடையச் செய்தான் என்றுதான் பொருள். இவ்வாறே அல்லாஹ் ஒரு மனிதனை தூக்கத்தில் - இரவில் தவப்பா செய்தான் என்றால், அவனுடைய ரூஹை - உயிரை தற்காலிகமாக கைப்பற்றிக் கொண்டான் என்றுதான் பொருள்.

இவ்விரு பொருள்களைத் தவிர வேறு பொருள் இல்லை. அதாவது பி.ஜே தவறாக எழுதியிருப்பது போல் உடலோடு உயிரைக் கைப்பற்றுதல் என்ற ஒரு வினோதமான பொருள் இல்லவே இல்லை என்பதை இவ்வசனம் தெளிவாக விளக்குகிறது.

ஒரு வசனத்தில் தூக்கம், இரவு, என்ற சொற்கள் வராமல் ஒருவரை இறைவன் தவப்பா செய்தான் என்றால் அதற்க்கு அவரை மரணிக்க செய்தான் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளும் கொடுக்கவே முடியாது. இதை நாங்கள் சவாலாகவே விடுகிறோம்.

பி.ஜே போன்றவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று தெரிந்துதான் எல்லாம் அறிந்த அல்லாஹ் அதற்கு இடம் வைக்காமல் நபி (ஸல்) அவர்கள் மூலம் 5:117,118 வது வசனத்திற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளான் போலும். அந்த நபி மொழியின் படி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தன் மக்கள் மத்தியில் வாழ்ந்தகாலம், பின்னர் அங்கிருந்து ரூஹ் மட்டும் கைப்பற்றபடுதல், பின்னர் தன் மரணத்திற்குப் பிறகு தன் தோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாத மறுமை வாழ்வு ஆகியவை தனக்கு நடந்தது போன்று ஈஸா நபிக்கும் நடந்தது என்று நபி (ஸல்) அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، أَخْبَرَنَا سُفْيَانُ ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :
إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ، ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ سورة الأنبياء آية 104 وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ : أَصْحَابِي ، أَصْحَابِي ، فَيَقُولُ : إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ فَأَقُولُ كَمَا ، قَالَ : الْعَبْدُ الصَّالِحُ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِيإِلَى قَوْلِهِ الْعَزِيزُ الْحَكِيمُ سورة المائدة آية 117 - 118

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதரிக்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர்.என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி)கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்குசாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயேஅவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன்.அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள்மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்." ( புகாரிகிதாபுத் தப்ஸீர் 3349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான'வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.'என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய 'நீ என்னை மரணிக்க செய்தபின்' என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்

பி.ஜே கொடுக்கும் பொருளை நாம் கொடுத்தால் (பலம்ம தவபைத்தனி என்ற சொல்லுக்கு உடலோடு உயிரைக் கைப்பற்றுதல்) நபி (ஸல்) அவர்களும் வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டி வரும். இவர் நம்ப தயாரா? 

நபி (ஸல்) அவர்களே இந்த வசனத்திற்கு தெளிவான விளக்கம் தந்த பிறகு. அந்த வசனத்திற்கு வேறொரு விளக்கத்தை இந்த இவர் கொடுக்கிறார் என்றால் இவரை நாம் எப்படி நபி(ஸல்) அவர்களை பின்பற்றுபவர் என்று சொல்லமுடியும். இவர் தன்னை திருத்திக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் இவர் மக்கள் மத்தியில் அவமானப்படப்போவது உறுதி.

ஈசா(அலை) அவர்களின் மரணத்தை உறுதி செய்யும் திருக்குர்ஆன் வசனம்


ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை நேரடியாக சுட்டிக்காட்டி மரணித்துவிட்டார் என்று காட்டும் திருக்குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

" மரியமின் மகன் ஈஸாவே, அல்லாஹ்வைத் தவிர என்னையும் எனது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் நீர் கூறினீரா என்று அல்லாஹ் கேட்பான். அவர் கூறுவார். நீ தூய்மையானவன், எனக்குத் தகாததை நான். கூறியதில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை நீயே நன்கு அறிந்தவனாவாய் என்று கூறுவார். (மேலும்) நீ எனக்கு கட்டளை இட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களோடு இருந்த காலம் அவரை அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால், நீ என்னை மரணிக்க செய்த பின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிக்கும் சாட்சியாளனாக இருந்தாய்." (திருக்குர்ஆன் 5:117,118)

இந்த வசனத்தைப் படித்து சிந்தித்துப் பாருங்கள். நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ் ஈசா(அலை) அவர்களிடம் அவரையும், அவரது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளும்படி மனிதர்களுக்கு கூறினீரா எனக் கேட்பான் என்றும், அவர் பதிலளிக்கையில் அவ்வாறு நான் கூறவில்லை என்றும் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்றே கூறினேன் என்றும் அவர்கள் மத்தியில் வழ்ந்திருந்தவரையில் தம்மையும், தனது தாயாரையும் கடவுள்களாக தமது மக்கள் வணங்கவில்லை என்றும் அதற்க்கு அவரே சாட்சியாளன் என்றும், அவரை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நம்பிக்கைக்கு என்ன மாற்றம் ஏற்பட்டதென அவர் அறியமாட்டாரென்றும், அவர்களை கவனிப்பவனும் அவர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பவனும் இறைவனே என்று அவர் பதில் சொல்லுவார் என்றும் இந்த இறைவசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாம், தெரிந்து கொள்வது யாதெனின், ஈசா நபி மனிதர்கள் மத்தியில் இருந்தவரை, அவரை மக்கள் கடவுளாகவோ, கடவுளின் குமாரனாகவோ வணங்கவில்லை என்றும், மக்கள் ஈசா நபியை கடவுளாக வணங்கியது, அவர்களின் மரணத்திற்கு பிறகே என்றும் மிகத் தெளிவாக தெரிகிறது. ஆகவே, ஈசா நபியின் மரணம் முன்பும், மனிதர்கள் அவரை கடவுளாக வணங்க ஆரம்பித்தது பின்பும் என மேற்படி இறைவசனம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

இப்னுமரியம், அதாவது மரியமின் மகன் ஈசா வருவார் என்ற சில நபி மொழியின்படி, சென்ற காலத்தில் யூதர்களுக்காக அனுப்பப்பட்ட ஈசா நபி மரணிக்காமல் வானத்தில் வாழ்ந்து வருகிறார் என்ற தவறான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஆலிம்கள் நீண்ட காலமாக போதித்து வந்ததன் காரணமாக குரானுக்கு எதிரான இந்த நம்பிக்கையை உம்மத்தே முஹம்மதியாவாகிய முஸ்லிம்களின் உள்ளத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. அந்த நம்பிக்கை பரிசுத்த குரானுக்கு எதிரானது என நிரூபிக்கும் பொறுப்பில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இருக்கிறது எனக் கூறிக் கொள்கிறேன். திருக்குரானுக்கு விளக்கம் கூறுவதற்கு முதல் தகுதி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். மேற்படி இறை வசனத்திற்கு விளக்கம் கூறுவதைப் போன்று ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தங்களுக்கு மறுமையில் நடக்கும் ஒரு சம்பவத்தை கூறுகிறார்கள். ஹஸ்ரத் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், மேற்படி இறை வசனத்திற்கு விளக்கமாக இந்த ஹதீஸை தங்கள் கிரந்தத்தில் எழுதியிருக்கிறார்கள்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதரிக்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர். என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி) கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள் மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்." ( புகாரி கிதாபுத் தப்ஸீர்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான 'வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.' என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது. நீங்களே நன்கு சிந்தனை செய்துபாருங்கள்.

நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய 'நீ என்னை மரணிக்க செய்தபின்' என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும் என்று முஸ்லிம் சகோதரர்களுக்கு நினைவுறுத்துகிறேன்.

இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் லட்சக்கணக்கான கிருஸ்தவர்கள் முஸ்லிம்கலாகிவிட்டார்கள். அவர்களிடம் உள்ள பழைய நம்பிக்கையாகிய ஈசா நபி வானத்தில் உயிரோடு பூத உடலுடன் இருக்கிறார் என்ற கொள்கை, இஸ்லாம் மார்க்கத்தில் படிப்படியாக புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டது. அதற்க்கு காரணம் முல்லாக்களான ஆலிம்களே. இறுதி காலத்தில் மரியமின் மகன் ஈசா வருவார் என்று சில ஹதீதுகளை காட்டி திருக்குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமான பொருள் கொடுத்து முஸ்லிம்கள் அனைவரையும் திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அதைத்தான் மறுமையில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) என் இறைவனே எனது சமுதாயத்தினர் இந்த குரானை முதுகுக்கு பின்னால் எறிந்து விட்டனர் என்று கூறுவார், என்ற வசனம் தெளிவாக தெரிவிக்கிறது

ஈசா (அலை) அவர்களின் மரணமும் அந்-நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும்-1


தமிழக முஸ்லிம்களிடையே சிலர், தம்மை தௌஹீது வாதிகள் என்றும், திருக்குர்ஆன், ஹதீஸ் இவற்றின் அடிப்படையில் மட்டுமே மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களென்றும் பறை சாற்றி சிறிது மதிப்பு பெற்றிருந்தனர். இப்போது அவர்கள் தாமும் அதே குழப்பக்கார குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதைத் திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டார்கள்.

அது மட்டுமன்று, இவர்களை, ஏனைய ஆலிம்சாக்களிலிருந்து மாறுபட்டவர்களாக, மார்க்க மேதைகளாக கருதிவந்த மார்க்கப்பற்றுள்ள இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இவர்கள் தமது பத்தாம் பசலித்தனத்தைக் காட்டியுள்ளனர்.

அந்-நஜாத் நவம்பர் இதழில் வெளியான 'ஈசா (அலை) மரணிக்கவில்லை, ஆயினும் மரணிப்பவர்களே' என்ற கட்டுரை இதனை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

ஈசா (அலை) அவர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் உள்ளார்கள் என்ற மூடநம்பிக்கை மட்டுமல்லாது, கற்பாறைக்குள்லிருந்து நிறை சூல் ஒட்டகம் வெளிவந்து குட்டி ஈன்றது. மூசா நபி காலத்தில் இறந்தவன் உயிர்பெற்றான், அதுவும் மாட்டின் அங்கத்தினால் அடிபட்டதும் உயிர்பெற்றான். (மாட்டையே அக்கால மக்கள் வழிபட்டனர். அந்த மாடு ஒருவனை உயிர்பித்தது என்கிறார்களோ என்னவோ). குகைவாசிகளின் உயிர் கைப்பற்றப்பட்டு முன்னூறு ஆண்டுகள் தூங்கினர் என்பன போன்ற 'கஸ்ஷுல் அன்பியா' கட்டுக் கதைகளை ஏற்பதில் இவர்கள் ஏனைய முல்லாக்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் மேற்கண்ட கட்டுரையில் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

இவற்றிக்கெல்லாம் மேலாக, இவர்கள் இஸ்லாமிய வட்டத்திற்குள் தான் உள்ளனரா என்ற சந்தேகத்தை இவர்களின் வாசகர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடிய வாசகங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, "உலகத்தில் நபி(ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதருக்கும், கொடுக்கப்படாத சில தனிச் சிறப்புகளை ஈசா நபி (அலை) அவர்கள் பெற்றுள்ளார்கள். என்று திருக்குரானே சான்று பகர்கின்றது" என்று இவர்கள் வரைந்துள்ளதைக் கூறலாம். இன்னும் கொஞ்ச நாள் சென்றால், "திருக்குரானை விட ஏனைய நூற்களை விட பைபிள் தனிச் சிறப்புகளை உடையது" (நவூதுபில்லாஹ்) எனக்கூசாமல் இந்த "மாமேதைகள்" கூறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.

இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிப்பறிக்கும் இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு ஒரு வாசகர்வட்டமும் ஒரு புரவலர் கூட்டமும் முஸ்லிம்களிடையே இருப்பது எத்துனை வேதனைக்குரியது!

இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் திருக்குரானை ஓதி அதன் வசனங்களைச் சிந்தித்து உணராததேயாகும். அல்லாஹ்வின் அந்த அருள்மறை

அபலா தஹ்கிலூன்

அபலா ததபக்கரூன்

அபலா ததப்பரூன்

என்றெல்லாம் கூறி அதன் வசனங்களை சிந்தித்து அது கூறும் உண்மைகளை உணரவேண்டுமென எடுத்துரைக்கிறது.

ஆனால், 'சுன்னத்வல் ஜமாஅத்' எனத் தங்களைக் கூறிக் கொள்ளுபவர்களைச் சார்ந்த ஆலிம்சாக்களாகட்டும், நஜாத், ஜன்னத் இவற்றின் மெத்த படித்த ஆலிம்சாக்களாகட்டும் இதனை உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை! இத்தகையவர்களை குறித்தே திருக்குர்ஆன்,

'அவர்களின் பெரும்பாலானவர்கள் ஊகங்களையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக ஊகங்கள் உண்மைகெதிராக எந்தப் பயனும் அளிப்பதில்லை . நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (10:37)

அதுமட்டுமன்று, திருக்குரானை புரிந்து கொள்வதற்கு அரபி மொழியறிவு மட்டும் இருந்தால் போதாது. 'தக்வா' என்னும் இறையச்சம் இன்றியமையாதது. இதனையும் திருக்குரானே எடுத்துரைக்கிறது. (2:3)

நஜாத் ஆசிரியரோ படு சுத்தம்! இவரிடம் 'தக்குவாவும்' இல்லை அரபி மொழியறிவும் இல்லை. இவருக்கு இறையச்சமிருந்தால் மேற்கண்ட கட்டுரையில் நம்மை ஏளனம் செய்து எள்ளி நகையாடி இருக்கமாட்டார். நயவஞ்சகர்கள் என்றும் வழிகேடர் என்றும் நம்மீது வசைபாடி இருக்கமாட்டார்.

இவருடைய ஏளனத்திற்கும், ஏச்சுகளுக்கும், அவதூறுகளுக்கும் நீண்ட மறுப்புகள் எழுதப்போவதில்லை. மாறாக இவருடைய ஏளனத்திற்கு,

"அவர்களுடைய ஏளனம் அவர்களையே சூழ்ந்துகொள்ளும்" (6:11)

என்ற திருக்குர்ஆன் வசனத்தையே பதிலாகாக் கூறுகின்றோம். இவருடைய வசைமொழிகளை,

"எனது துக்கத்தையும், வேதனையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்". (12:87)

என்ற திருமறை வசனத்திற்கேற்ப இறைவனிடமே விட்டுவிடுகிறோம். அவதூறுகளுக்கு,

"லஹ்னத்துல்லாஹி அலல் காதிபீன்"

"பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!

என்ற ஒரே பதிலை கூறுகின்றோம்.

நஜாத் ஆசிரியருக்கு அரபி மொழியறிவு இருந்தால் மேற்கண்ட கட்டுரையில், அர்த்த மற்ற உளறல்களை நிச்சயமாக தவிர்த்திருப்பார். அவருக்கு அரபி மொழியறிவு இல்லை என்பது ஊரறிந்த விஷயம், ஏன் அதனை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார் நஜாத் அக்டோபர் இதழில்! ஆனால் அவருக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கும் அந்த ஆலிம்சா பெருந்தகையினருக்கும் அறபி மொழியறிவு இல்லை போலிருக்கிறது. அந்த மண்குதிரையை நம்பி இவர் ஆற்றில் இறங்கியிருக்க வேண்டாம், ஆழம் தெரியாது காலை விட்டு அவதிப்பட்டிருக்கவும் வேண்டாம்.

இவர்களின் அறபி மொழியறிவு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். "சதிகாரர்களுகெல்லாம் சதிகாரன் என்று அல்லாஹ் தன்னையே குறிப்பிடுகின்றான். (பக்கம் 20) திருக்குரானில் அல்லாஹ் தன்னைக்குறித்து பெரிய சதிகாரன் என்று கூறுகின்றானாம். ஆலு இம்ரான் அதிகாரத்தின் 55 ஆம் வசனத்திற்கு இவர் கொடுத்துள்ள பொருள் இது. இந்த ஆயத்தின் அர்த்தத்தையே அனர்த்தமாக்கியிருக்கிறார்.

'வ மகரு வமகரல்லாஹு வல்லாஹு ஹைருல் மாஹிரீன்'

என்பதன் பொருள், " அவர்கள் (சதித்) திட்டம் போடுகிறார்கள். அல்லாஹ்வும் (அதனை முறியடிக்க) திட்டம் போடுகிறான். ஆனால் திட்டமிடுபவர்களில் மிகச் சிறந்தவன் அல்லாஹ்வே ஆகும் "என்பதே!

இது போன்ற ஆயத்துகளுக்கு பொருள் தருவதில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் கூட தவறே செய்திருக்கின்றனர். அல்-பக்கரா அதிகாரத்தின் 15,16 திருவசனங்களில் காணப்படும் "இன்னமா நஹ்னு முஸ்தஹ்சிவூன், அல்லாஹு யஸ்தஹ்சிவூபிஹீம்" என்றிருப்பதற்கு, 'நாங்கள் பரிகாசம் பண்ணுகிறோம் அல்லாஹ்வும் அவர்களை பரிகாசம் பண்ணுகிறான் என்று மொழி பெயர்த்துள்ளனர். அதாவது நயவஞ்சகர்கள், நம்பிக்கையாளர்களை பரிகாசம் பண்ணுகிறார்களாம் அதற்காக அல்லாஹ் அந்த நயவஞ்சகர்களை பரிகாசம் செய்கிறானாம். எப்படி இருக்கிறது கதை! யாரேனும் பரிகாசம் செய்தால் அவர்களைத் திருப்பி பரிகாசம் செய்வதற்கு அல்லாஹ் என்ன சிறுபிள்ளையா? (நவூதுபில்லாஹ்) ஒரு செயலுக்குரிய தண்டனையாக அந்த செயலையே குறிப்பிடுவது அரபி மொழி வழக்காகும். 2:195, 42:41 ஆகிய ஆயத்துகளில் இவ்வாறே வந்துள்ளது. அதனால் மேற்கண்ட திருவசனத்திலுள்ள, "அல்லாஹு யஸ்தஹ்சிவூ பிஹிம்" என்பதற்கு அல்லாஹ் அவர்களின் பரிகாசத்திற்கு தண்டனை வழங்குவான் என்றே பொருள் தரவேண்டும்.

இப்படி அறபி மொழியின் மொழி வழக்குகளை அறியாத இந்த ஆலிம்சாக்கள் சில ஆயத்துகளுக்குத் தவறான அர்த்தம் செய்துவிடுவதுண்டு. அதன் காரணமாக விபரீதமான கருத்துக்கள் உருவானால் அதை சமாளிக்க தங்களின் கற்பனை வளத்தைப் பயன் படுத்தி கதைகளைப் புனைந்து விடுவர்.

இப்படி புனையப்பட்ட கதையே "ஈசா நபியின் வானுலகப் பயணம்." நஜாத் ஆசிரியர் அதே கதைக்கு "ஈசா நபி அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டார்கள்" என்று வேறு தலைப்பு தருகிறார். மிகக் கெட்டிக்காரத்தனமாக எழுதிவிட்டதாக எண்ணம் அவருக்கு

ஈசா நபியைப் பற்றி அவர்கள் அல்லாஹ்வால் கைப்பற்றப்பட்டார்கள் (ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள்) மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் (மீண்டும் பூமியில்) வாழ்வார்கள் என்றெல்லாம் நஜாத் ஆசிரியர் வரைந்துள்ளார். (பக்கம் 8)

ஆனால் இவையெல்லாம் அவருடைய ஊகங்களே. அவருடைய கட்டுரை நெடுகிலும் அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்று அவருடைய ஊஹங்களை எடுத்துவிடுகிறார். இந்த லட்சணத்தில் இவர், "காதியானிகள் நம்மவர்களின் ஊகங்களையும் சுய கருத்துக்களையும் எளிதாக முறியடித்து வெற்றிவாகை சூடிக்கொள்கின்றனர்." (பக்கம் 5) என ஏனைய ஆலிம்சாக்களை சாடுகின்றார்.

திருக்குர்ஆன் நபி மொழி இவற்றை அறிந்து திட்டவட்டமாகக் கூறுவதை விட்டு வெறும் ஊகங்களையும் கற்பனைகளையும் அவிழ்த்து விடுபவர்களைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

"வெறும் ஊகங்களையே அன்றி உண்மையை அவர்கள் பின்பற்றுவதில்லை. கற்பனையிலேயே அவர்கள் மூழ்கி இருக்கின்றனர்." (6:117)

"வீண் சந்தேகத்தையன்றி அவர்கள் பின் பற்றுவதில்லை. அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே." (10:67)

"அவர்களுக்கு இதைப்பற்றிய எவ்வித அறிவுமில்லை. அவர்கள் வீண் கற்பனை செய்பவர்களேயன்றி வேறில்லை.(43:21)

"ஈசா நபி உயிருடன் வானத்தில் உள்ளார்" என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் திருக்குரானில் இருந்து காட்டுங்கள் என்று சமாதான வழி இதழ் மூலமாக கேட்கப்பட்டது. பல ஆதாரங்கள் தந்துள்ளதாக நஜாத் ஆசிரியர் பீற்றிக் கொண்டுள்ளாரே தவிர ஈசா நபி உயிருடன் இருப்பதைத் தெரிவிக்கும் ஒரு ஆதாரத்தையும் அவர் தரவில்லை.

இந்த விஷயம் பற்றி இதுவரை அஹ்மதியா ஜமாத்துடன் வாதம் செய்த ஆலிம்சாக்கள் பாடிய அதே பல்லவியைத் தான் நஜாத் ஆசிரியரும் பாடி இருக்கிறார். ராகம் தான் சற்று வித்தியாசப்படுகிறது. இப்பிரச்சனை தோன்றிய நாள் முதல் இந்த ஆலிம்சாக்கள் எந்த ஆயத்தை தமது கட்டுக்கதைக்கு ஆதாரமாகக் கூறி இருந்தார்களோ அந்த ஆயத்தையே நஜாத் ஆசிரியரும் தமது ஆதாரமாக் முதலில் எடுத்து வைக்கிறார். (பக்கம் 8) இந்த ஆயத்தில் அவர் கூறும் அர்த்தப்படிப் பார்த்தால் கூட ஈசா நபி இயற்கையாக மரணித்துப் போகவில்லை என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஈசாவைக் கொன்றுவிட்டோம் என்ற யூதர்களின் வாதத்தை மறுத்து இறைவன் அவர்கள் அவரை கொல்லவில்லை என்று கூறியுள்ளானே தவிர அவர் இயற்கையாக இறந்தே போக வில்லை என்று கூறவில்லையே! அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டதாக இறைவன் கூறியிருப்பது எந்த வகையில் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் ஆகும்? இறைவனளவில் போகின்றவர்களெல்லாம் உயிருடனா போகிறார்கள்?

நஜாத் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனத்தின் சரியான பொருளை கீழே தருகின்றோம்.

"அல்லாஹ்வின் தூதர், மர்யமின் மகனான ஈசா மஸீஹை கொன்று விட்டோம் என்று அவர்கள்(யூதர்கள்) கூறுகின்றனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, சிலுவையில் அறைந்து கொல்லவில்லை. ஆயினும் அவர் அவ்வாறு (சிலுவையிலிடப்பட்டவர் போன்று) தோற்றமளிக்குமாறு செய்யப்பட்டது. இதில் கருத்து வேடுபாடு உள்ளவர்கள் சந்தேகத்தில் உள்ளனர். அவர்கள் ஒரு ஊகத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களேயொழிய அது பற்றிய திட்டவட்டமான அறிவு அவர்களுக்கில்லை. அவர்கள் அவரை உறுதியாக கொலை செய்யவேயில்லை.

இதற்க்கு மாற்றமாக அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான். மேலும் அல்லாஹ் வல்லமையுள்ளவனும், அறிவுள்ளவனுமாவான். (4:158,159)

ஈசா நபி மரணிக்காது உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு இந்தத் திருவசனத்தில் என்ன சான்று உள்ளது என்பதை நஜாத் ஆசிரியர் கூறவேயில்லை. அதைவிடுத்து ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டார்களா இல்லையா, அடிக்கப்பட்டது ஈசா நபியா வேறொரு நபரா? என்பன போன்ற வாதத்திற்கு வாசகர்களைத் திசைத் திருப்புகிறார்.

இதற்காக ஆறு பக்கங்களை (பக்கம் 9 முதல் 14 வரை) செலவிட்டுள்ள இவர், இவருடைய கூற்றுக்கு உருப்படியான எந்த ஆதாரத்தையும் தராது சிலுவை சம்பவம் பற்றிய நமது கருத்துக்களை மறுக்கவும் நையாண்டி செய்யவும் முற்படுகிறார்.

முதலில் ஈசா நபி (அலை) அவர்கள் ஏனைய மக்களைப் போன்று மரணிக்கவில்லை என்பதற்கு இவர் ஆதாரம் தரவேண்டும்! அப்படி ஆதாரம் காட்டாத நிலையிலேயே இவர். ஈசா நபியை இறைவன் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். என்ற வசனத்தை எடுத்துக்காட்டி அதற்க்கு ஈசா நபி உடலுடனும், உயிருடனும் உயர்த்திக்கொள்ளப்பட்டார் என்று பொருள் தருகிறார்.

ஆனால், 'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்ற சொற்றொடருக்கு உயிருடனும், உடலுடனும் உயர்த்திக்கொள்ளப்பட்டார்கள் என்று பொருள் கொள்வதைவிட அபத்தம் வேறில்லை! ஈசா (அலை) எங்கிருந்து எங்கு உயர்த்தப்பட்டார்? அல்லாஹ் அளவிலென்றால் அல்லாஹ் உயரத்தில் உள்ளானா? 'சுவிசேஷகர் மாற்கு' (பைபிள் புதிய ஏற்பாட்டை எழுதியவர்களில் ஒருவர்) கூறி இருப்பது போன்று ஈசா நபி "பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்" என நஜாத் ஆசிரியரும் கூற விழைகிறாரோ என்னவோ ! இப்படியே போனால் பாதிரி அப்துல்லா ஆத்தமைப் போன்று பாதிரி அப்துல் ஹக் போன்று இவரும் பாதிரி அபூ அப்துல்லா, ஆகிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை! ஆனாலும் நம்முடைய இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் அவ்வாறு ஆக மாட்டார் என நம்புவோம்.

"பல் ரப அவுல்லாஹு இலைஹி "அன்ற சொற்றோடரிலுள்ள 'ரபா ஆ' என்ற வினைச்சொல் அல்லாஹ்வை எழுவாயாகக் கொண்டு வரும்போது அதற்க்கு, ஆன்மீகமான உயர்த்துதல் என்று மட்டுமே பொருள் தரயியலும். மாறாக உடலுடன் உயர்த்துதல் என்ற பொருளும் தரலாம் என்பதற்கு எந்த எடுத்துக்காட்டையும் யாராலும் தர இயலாது. அத்தகையதொரு அர்த்தம் அந்தச் சொல்லுக்கு உள்ளது எனக்கூறும் நஜாத் ஆசிரியர், அதற்க்கான எடுத்துக்காட்டை திருக்குரானின் ஏனைய ஆயத்துக்கள், ஹதீஸ்கள், இப்பிரச்சனை எழுவதற்கு முன்னால் எழுதப்பட்ட தப்சீர்கள், அகராதிகள் இவற்றிலிருந்து காட்டவேண்டும்.

மனிதன் செயப்படு பொருளாகவும் அல்லாஹ் எழுவாயாகவும் கொண்ட ஒரு வசனத்திற்கு 'ரபா ஆ' என்ற பயனிலை வருமேயானால் அதற்க்கு ஆன்மீக உயர்த்துதல் என்ற ஒரே அர்த்தமே திருக்குரானிலும், ஹதீஸ்களிலும், இலக்கண நூல்களிலும், தப்சீர்களிலும் தரப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக:-

திருக்குர்ஆன் வசனங்கள்:

"நாம் விரும்பியிருந்தால் அவரை (பல் அம்பாவூர் என்பவரை) உயர்த்தியிருப்போம். !" (7:176)

"அல்லாஹ் உங்களிடையேயுள்ள நம்பிக்கையாளர்களை உயர்த்துவான்." (58:11)

"நாம் அவரை (இத்ரீஸ் நபியை) மேலான, உயர்ந்த ஓர் இடத்திற்கு உயர்த்தினோம்." (9:58)

இந்தத் திருமறை வசனங்களில் எல்லாம் உள்ள 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு ஆன்மீகமான உயர்த்துதல் என்பதே பொருளாக தப்சீர்களில் தரப்பட்டுள்ளது.

நபிமொழிகள்

"ஓர் இறையடியார் பணிவை மேற்கொண்டால் இறைவன் அவரை ஏழாவது வானத்திற்கு உயர்த்திவிடுவான் ! (கன்சுல் உம்மால் பாகம் 7 பக்கம் 68)

"அல்லாஹ் சில சமுதாயங்களை இந்தத் திருக்குர்ஆன் வாயிலாக உயர்த்துகிறான். சிலரை தரம் தாழ்த்தவும் செய்கின்றான். (கன்சுல் உம்மால் பாகம் 1 பக்கம் 29)

இந்த நபிமொழிகளிலும் 'உயர்த்துதல் என்ற சொல் ஆன்மீக உயர்த்துதல் என்ற' பொருளிலேயே கூறப்பட்டுள்ளது.

தப்சீர் நூல்கள்

"அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை தன்னிடத்திற்கு அழைத்து தன்னளவில் உயர்த்தினான்." (தப்சீர் ஸாபி பக்கம் 113)

'ராபியுக்க இலய' என்ற வாக்கிற்கு உமது நற்செயல்களை என்னளவில் உயர்த்துவேன் என்பதே பொருளாகும். மேலும் நான் உமக்கு உயர்ந்த பதவியைத் தந்தருளுவேன் என்பதுமாகும். (தப்சீர் கபீர் அல்லாமா ராஸி பாகம் 2 பக்கம்691)

அகராதிகள்

எதனையாவது அணுகச் செய்வதற்கு 'ரபா ஆ' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. - ஸிஹாஹ் ஜவ்ஹரி

அரசரிடத்து உயர்த்தப்படுதல் என்பது அரசருக்கு நெருக்கமானவன் என்பதே- அக்ரபுல் மவாரித்

ரபாஆ என்பது இழிவுபடுத்துதல் என்பதன் எதிர்ச்சொல் ஆகும். - தாஜுல் உரூஸ்

அர்ராபி- உயர்த்துகின்றவன் என்ற இறைவனின் குணப்பெயருக்கு நம்பிக்கையாளர்களுக்கு மீட்பளிப்பவன். இறைநேசர்களுக்கு தன்னை அடையும் வாய்ப்பினை வழங்குபவன் என்றெல்லாம் பொருள் படும். - லிஸானுள் அரப்

இவற்றிலிருந்தெல்லாம் ரபா ஆ என்பதற்கு ஆன்மீகமாக உயர்த்துதல் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளும் தரயியலாது என திட்டவட்டமாக புலனாகிறது. இனி "இலைஹி" என்ற சொல்லை கவனிப்போம்.

இறைவனளவில் உயத்துதல் என்பது சடப் பொருளான உடல் இறைவனிடம் செல்வது எனப் பொருள்படாது. ஏனெனில் இறைவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லை. இது குறித்து திருக்குர்ஆன்.

அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் இருக்கின்றான். (6:4)

நீங்கள் எங்கெல்லாம் இருக்கின்றீர்களோ அங்கெல்லாம் அல்லாஹ் இருக்கின்றான். (2:115)

நாம் மனிதனுடன் அவனது உயிர்நாடிக்கருகே இருக்கின்றோம். (50:16)

என்றெல்லாம் கூறுகின்றது. இவற்றிலிருந்து இறைவனளவில் உயர்த்தப்படுதல் என்பதற்கு இறைவனிடத்திற்கு உடல் உயர்த்தப்பட்டது என்று எவ்வாகையிலும் பொருள்கொள்ள இயலாது என்பதயும், அப்படி பொருள் கொண்டால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை என்பதையும் உணரலாம்.

ஈசா நபி (அலை) அவர்களை இறைவன் தன்னளவில் உயர்த்திக் கொண்டதாக கூறி இருப்பது அவர்கள் மரணிக்கவில்லை என்பதற்கு எவ்வகையிலும் சான்றாக அமையாததைப் போலவே அவர்கள் கொல்லப்படவோ சிலுவையில் அறைந்து கொல்லப்படவோ இல்லை என்பதும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக அமையாது. ஒருவர் சிலுவையில் அறையுண்டோ அல்லது வேறுவிதமாகவோ கொல்லப்படவில்லை. என்று கூறப்பட்டால். அவர் பின்னர் இயற்கையாகக் கூட இறக்கவே இல்லை என்பது அதன் பொருளன்று. மாறாக, அகால மரணம் அல்லது ஆபத்தான மரணம் அவருக்கு நேரவில்லை என்பது மட்டுமே அதற்குப் பொருள்.

மேற்கண்ட திருமறை வசனத்திலுள்ள 'வமகத்தலூஹு வமா சலபூஹூ' என்று இருப்பதை வெட்டிக் கொல்லவுமில்லை, சிலுவையில் அறைந்து கொல்லவுமில்லை என்று திரித்துக் கூறுவதாக நஜாத் ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார். அதன் பின்னர் அவரே கத்தல் என்பதற்கு வெட்டப்படுவது என்று பொருள் கூறிவிடுகிறார். இதிலிருந்து இவருடைய அரைவேக்காட்டுத் தனத்தை புரிந்துகொள்ளலாம்.

'சலபு' என்பதற்கு சிலுவையில் அறையப்படவில்லை என இவர் கூறும் பொருளே தவறானது. அஸ்ஸல்ப என்பதற்கு 'அல் கித்லத்துள் மக்ருபத்து' அதாவது சிலுவையில் அறைந்து கொல்லுதல் என்ற பொருளே லிஸானுல் அரப், தாஜுல் உரூஸ் ஆகிய அரபி மொழி அகராதிகளில் தரப்பட்டுள்ளது.

திருக்குரானின் பிற இடங்களில் காணப்படும் இச்சொல் நாம் சொல்லும் அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக,

அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதர்களுடனும் போர் செய்தும் பூமியில் குழப்பம் செய்தும் கொண்டும் இருப்பவர்களுக்குரிய தண்டனை 'அன்யுகத்தலு'- அவர்கள் வெட்டப் படவேண்டும் அல்லது யுஸல்லபு - அவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்படவேண்டும். (5:34)

இந்த ஆயத்திலுள்ள 'யுஸல்லபூ' என்பதற்கு சிலுவையில் வெறுமே ஏற்றி வைப்பது என்று பொருள்கொள்ளயியலாது. மூஸா நபியின் மீது நம்பிக்கைக் கொண்ட ஜால வித்தைக்காரர்களை நோக்கி, 'லா உஸல்லி பன்னகும்' 'நான் உங்களை சிலுவையில் அறைந்து கொல்லுவேன்' என்று பிர்அவ்ன் கூறியதாக வருகிறது 20:72. இங்கும் சிலுவையில் அறைந்து கொல்லுதல் என்று பொருள்படும் வண்ணமே இவ்வசனம் அமையப் பெற்றுள்ளது.

சுருக்கமாக 'சலபூ' என்ற சொல் ஆங்கிலத்தில் Hanged என்ற சொல்லைப் போன்றது. Hanged என்றால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுதல் என்று பொருள்படும். அதுபோன்று சலபூ என்பதற்கு சிலுவையிலிடுதல் சிலுவையிலறைந்து கொல்லுதல் என்பதே பொருளாகும். எனவே வமா சலபூஹூ என்பதற்கு சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்று பொருள் கொள்வதே மிகச் சரியானது.

'இறைவனளவில் உயர்த்தப்படுதல்' என்பது உடலுடன் உயர்த்தப்படுவது அன்று என்பது உறுதியாகிவிட்ட நிலையில், 'வமா சலபூ' என்பதற்கு நஜாத் ஆசிரியர் கூறுவது போன்று சிலுவையில் அறையப்படவேயில்லை என்று வாதத்திற்கு ஒப்புக்கொண்டாலும் அது கூட ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்க்குச் சான்றாகாது. சிலுவையிலிருந்து தப்புகின்ற ஒருவருக்கு மரணமே இல்லையா என்ன?

வெறும் குதர்க்கவாதம் செய்தும், நம்முடைய சான்றுகளை ஊகங்களால் மறுத்தும், தமது மூடநம்பிக்கையை நிலை நிறுத்தி விடலாம் என நஜாத் ஆசிரியர் கனவு காண்கிறார்.

'சாகடிப்பதற்காக சிலுவையில் அறையப்பட்டவனை மூன்று மணி நேரத்தில் இறந்து விட்டதாக எண்ணி எந்தப் புத்திசாலியும் அவனை சிலுவையிலிருந்து இறக்கிவிடமாட்டான்' என ஓரிடத்தில் குறிப்பிடும் இவர், ஈசா நபிக்கு பகரமாக வேறொருவனை அதிகாரிகள் சிலுவையில் அறைந்தனர் என இன்னொரு இடத்தில் கூறுகிறார். இவர் குறிப்பிடும் செயல் மட்டும் புத்திசாலித்தனம் ஆகிவிடுமா?

சிலுவையில் அறையப்பட்ட ஈசா நபி அதில் இறந்து விட்டதாகக் கருதி அதிலிருந்து இறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஈசா நபிக்கு பகரமாக வேறொருவர் சிலுவையில் அறையப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. காலமெல்லாம் தம்மோடு வாழ்ந்திருந்த ஈசா நபியை யூதர்களுக்குத் தெரியாதா என்ன? ஈசா நபியை சிலுவையில் அறைந்த கொல்ல வேண்டும் என்று வெறியோடு அலைந்த யூதர்கள் அவருக்கு பகரமாக வேறொருவன் அறையப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்று கூறுவதை விட அபத்தம் வேறில்லை.

இப்படியெல்லாம் சிலுவை சம்பவத்தை போஸ்ட்மார்டம் செய்யும் நஜாத ஆசிரியர் ஒரு விஷயத்தை சிந்திக்க தவறிவிட்டார். நபிமார்களில் பலரை அவர்களின் எதிரிகள் கொன்றுவிட முயன்றிருக்கின்றனர். ஆனால் அவர்களில் யாரையுமே இறைவன் தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றவில்லை. அதுதான் போகட்டும் அவனுடைய நபிமார்களில் ஏன் மக்களில் தலை சிறந்தவர்களும் அவனுடைய அன்பிற்கும், நேசத்திற்கும் ஏனைய எல்லோரையும் விட மிக உயர்ந்தவர்களான அண்ணல் மாநபி (ஸல்) அவர்களின் உயிருக்கு பல முறை அபாயம் நேரிட்டிருக்கிறது.

அத்தகு தருணங்களில் கூட இறைவன் அவர்களைத் தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றவில்லையே! இவ்வாறிருக்க ஈசா நபியை மட்டும் அவன் எவ்வாறு உயர்த்திக் காப்பாற்றி இருப்பான்? இஸ்ரவேல் மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்ட ஈசா நபியை தன்னளவில் உயர்த்த வேண்டிய அவசியமென்ன? அவர்களுக்கு அளித்த பணியை அவர்கள் நிறைவேற்ற அவர்களுக்கு உதவிபுரிவதல்லவா அவனுடைய கடமை!

ஈசா நபி வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள் என்பதும் இறைவனளவில் உயர்த்தப்பட்டார்கள் என்பதும் உண்மையில் பரமேறுதல் என்ற கிருஸ்தவ நம்பிக்கையின் மறுபதிப்பேயாகும். இதனை நாம் மட்டும் கூறவில்லை. இஸ்லாமிய நல்லறிஞ்சர்கள் பலரும் இவ்வாறே கூறியிருக்கிறார்கள். "பத்தஹுல் பயான் என்னும் நூலில் இரண்டாம் பாகத்தில் நாற்பத்தி ஒன்பதாம் பக்கத்தில் இவ்வாறு காணப்படுகிறது.

"ஈசா நபி முப்பத்து மூன்றாவது வயதில் உயர்த்தப்பட்டார்கள் என்று கூறப்படுவதில் நம்பக்கூடிய சான்று எதுவுமில்லையென்று ஹாபிலிப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது 'ஸாதுல் மா ஆத்' எனும் நூலில் வரைந்துள்ளார்கள். இது கிறிஸ்தவர்களிடமிருந்து வந்த ஒரு கொள்கை என ஷாமி என்பவர் கூறுவது உண்மையே."

ஈசா நபிக்கு இறைவன், நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லோரையும் விட சிறப்பளித்தான் (நவூதுபில்லாஹ்) அவர்களைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான் (நவூதுபில்லாஹ்) என்றெல்லாம் கூறி கிறிஸ்தவக் கொள்கைக்கு ஊட்டம் தருகிறார் 'நஜாத்' ஆசிரியர். இதற்குத்தான் இவர் தமது பத்திரிகைக்கு 'நஜாத்' - இரட்சிப்பு எனப்பெயர் வைத்தார் போலும்! இவர், இவர் பின்னால் போகின்றவர்களை 'ஆலிம்களாக்குகிறேன்' என்று சொல்லி கிறிஸ்தவர்களாக்கிவிடுவார் போலிருக்கிறது. இறைவன் காப்பாற்றுவானாக!