சிலுவை சம்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா?


சிலுவை சம்பவத்தின் போது ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொல்ல முயன்றபோது, இறைவன் அவர்களைக் காப்பாற்றுவதற்காக வேறொரு நபருக்கு ஈசாநபி (அலை) அவர்களின் உருவத்தைக் கொடுத்தான் என்றும் அந்த நபரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால் திருகுரானிலோ, நம்பகமான நபிமொழிகளிலோ இந்தக் கருத்துக்கு எந்தச் சான்றும் இல்லை. என்றாலும் அந்தக் காலத்து திருக்குர்ஆன் விரிவுரையாளரான தபரி முதல் இந்தக் காலத்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளரான ஆ. கா . அப்துல் ஹமீது பாகவி வரை பல்வேறு விரிவுரையாளர்களும். மொழி பெயர்ப்பாளர்களும் தம்முடைய நூல்களில் இந்தக் கட்டுக் கதையை கூறியுள்ளனர்.

இந்தக் கதை, ஆரம்பகாலத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறிய யூதர்களாலோ, கிறிஸ்தவர்களாலோ புனையப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் இந்தக் கதையை கூறுகின்றவர்கள் எல்லாம் இந்தக் கதைக்கு அறிவிப்பாளர்களாக மதம் மாறிய யூதர்களையோ, கிறித்தவர்களையோதான் குறிப்பிடுகின்றனர். தபரி என்ற திருக்குர்ஆன் விரிவுரையாளர் ஈசா நபிக்கு பகரமாக இன்னொருவர் சிலுவையில் அறையபெற்றார் என்ற கூற்றுக்கு அறிவிப்பாளராக ஹைப் என்ற யூதரையே குறிப்பிட்டுள்ளார். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்கள் தமது பதினேழு சீடர்களுடன் ஓர் அறையில் இருந்ததாகவும் அதில் ஒருவர் ஈசா நபி போல் இறைவனால் உருமாற்றப்பட்டதாகவும். அவரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றதாகவும் இந்த வஹப் கூறியுள்ளார்.

இந்தக் கட்டுக்கதை தோன்றுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை தழுவிய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும்,

...... அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை சிலுவையில் அறைந்துகொள்ளவுமில்லை......." (4:158) 

என்ற திருக்குர்ஆன் வசனம் புரியாத புதிராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டது நடந்தேறிய ஒரு உண்மை நிகழ்ச்சி. ஆனால் திருக்குரானோ ஈசா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்று கூறுகிறது. இந்தப் புதிருக்கு விடையாக மேற்கண்டகட்டுக்கதையை இவர்கள் புனைந்து கூறியுள்ளனர். சிலுவை சம்பவம் உண்மையில் நிகழ்ந்த ஓன்று. ஆனால் அறியப்பட்டது ஈசா நபி அல்ல. மாறாக அவர்களின் உருவத்தைப் பெற்ற இன்னொருவரே என இவர்கள் கூறினார். 

ஈசா நபிக்குப் பகரமாக அப்பாவியான இன்னொருவர் சிலுவையில் பலியிடப்பட்டாரா? ஈசா நபியை காப்பாற்ற இந்த நியாயமற்ற செயலை இறைவன் செய்தானா? என்ற கேள்வி சிந்திக்கின்ற எவருக்கும் எழும். 

இப்படிப்பட்ட கேள்விகள் எழுமே என்ற எண்ணம் இந்தக் கதையைப் புனைந்தவர்களுக்கும் ஏற்பட்டிருக்கவேண்டும். இதற்காக இன்னொரு துணைக் கதையையும் கூறியுள்ளார்கள். க அதா என்பவரின் கூற்றை ஆதாரமாகக் காட்டி தபரி கீழ்வருமாறு கூறுகிறார்:

"மரியமின் மகன் ஈசா நபி(அலை) அவர்கள் தங்களின் தோழர்களை நோக்கி எனது தோற்றத்தைப் பெற்று சிலுவையில் கொல்லப்பட உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்க்கு அவர்களில் தோழர்களில் ஒருவர் இறைவனின் தூதுவரே, நான் அதற்குத் தயார் என்று பதில் அளித்தார். இவ்வாறு அந்த நபர் கொல்லப்பட்டார் இறைவன் தனது தூதரைப் பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக்கொண்டான். (தி முஸ்லிம் வேர்ல்ட் வால்யும்70 எண், 2 பக்கம் 97 ) 

இப்னு இஷ்ஹாக் என்பவரும் தமது வரலாற்று நூலில் இந்த ஆள்மாறாட்ட கதையைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பலியானவர் ஈசா நபியின் தோழர்களில் ஒருவரன்று, மாறாக சர்கஸ் என்பவரே எனக் கூறுகின்றார். இதே இப்னு இஷ்ஹாக் இன்னோரிடத்தில் பலியானது யூதாஸ் எனக்குறிப்பிட்டு அதற்கு அறிவிப்பாளராக கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒருவரைக் கூறுகிறார். ஈசா நபியைப் பிடிக்க வந்த டி டியானஸ் என்பவரே சிலுவையில் பலியானார் என்று கூறுபவர்களும் உண்டு.

எது எப்படி இருப்பினும், இறைவன், ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவர்களின் தோழர்களில் ஒருவருக்கே எதிரிகளில் ஒருவருக்கோ ஈசா நபி அவர்களின் உருவத்தைக் கொடுத்து அந்த நபரையே சிலுவையில் மரணிக்கச் செய்தான் என்ற கூற்று சிந்திக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறைவன் இந்த நியாயமற்ற செயலை செய்தான் என்று இந்த ஆள் மாறாட்ட நாடகத்தை அரங்கேற்றினான் என்றோ கூறுவது அந்த இறைவனின் தூய தன்மைக்குக் களங்கம் கற்பிப்பதாகும். 

ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கு முன்னால் தோன்றிய நபிமார்களுக்கு இன்னல்கள் இடுக்கண்கள் ஏற்படாமல் இருக்கவில்லை. அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருந்ததுமில்லை. 

ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்கள், அவர்களின் எதிரிகளால் நெருப்புக்குழியில் போடப்பட்டார்கள். அந்த ஆபத்தை அவர்களே சந்தித்தார்கள். அல்லாஹ் அவர்களை அந்த நெருப்புக் குழியிலிருந்து அற்புதமாகக் காப்பாற்றினான். அதுபோல ஹஸ்ரத் மூஸா(அலை) பிரௌனின் பிடியிலிருந்து காப்பாற்றினான். ஹஸ்ரத் யூனுஸ்(அலை) அவர்கள் கப்பலிலிருந்து கடலில் தள்ளப்பட்ட ஒரு மீனால் விழுங்கப்பட்ட நிலையிலும் இறைவன் அவர்களைக் காப்பாற்றினான். ஹஸ்ரத் யூசுப்(அலை) அவர்கள் சிறுவராக இருந்தபோது அவர்களின் சகோதரர்களாலேயே கிணற்றில் தள்ளப்பட்டார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட அந்த தருணத்தில் இறைவன் அவர்களை ஒரு பயணக்குழு மூலம் காப்பாற்றினான். 

இந்த நபிமார்கள் எல்லாம் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துகளை அவர்களே நேரிடையாகச் தந்தித்தார்கள் . இறைவன் அவர்களைத் தனது வல்லமையால் காப்பாற்றி மீண்டும் மக்கள் முன்னால் உலவச் செய்தான். 

அவ்வாறே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் அவர்களே அந்த ஆபத்துகளை சந்திக்க வைத்து அவற்றிலிருந்து இறைவன் காப்பாற்றினான்.

இவ்வாறிருக்க, ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அவர்களுக்குப் பகரமாக இன்னொருவரை அந்த ஆபத்தில் மாட்டி விட்டு ஈசா நபி அவர்களை இறைவன் உயர்த்திக் கொண்டான் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? இத்தனை நபிமார்களுக்கு ஒரு நீதி, ஈசா நபி அவர்களுக்கு மட்டும் தனி நீதியா? 

உண்மையில், ஈசா நபி அவர்களும் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை அவர்களே சந்தித்தார்கள். அவர்களே சிலுவையில் அறையுண்டார்கள். ஆனால் இறைவன் ஏனைய நபிமார்களை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியது போன்று ஈசா நபி அவர்களையும் சிலுவையிலிருந்து காப்பாற்றினான். அவர்கள் அதில் மரணமடையாது உயிர்தப்பினார்கள். 

ஈசா நபி அவர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள், ஆனால் அவர்கள் அதில் இறக்கவில்லை. இறைவன் அவர்களை அந்த மோசமான மரணத்திலிருந்து காப்பாற்றினான். என்ற புதிய கருத்தை - பகுத்தறிவு ஏற்கின்ற கருத்தை அஹ்மதியா ஜமாத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களே உலகுக்கு எடுத்துரைத்தார்கள்.

இந்தக்கருத்து திருக்குர்ஆன் வசனங்களுக்கோ, நபிமொழிகளுக்கோ எவ்வகையிலும் முரண்படவில்லை.

சிலுவை சம்பவம் தொடர்பான திருக்குர்ஆன் வசனத்தில் அதாவது 4:158 ஆம் வசனத்தில் 'ஸலப' என்ற சொல் காணப்படுகிறது இது வெறுமனே சிலுவையில் அறையப்படுவதை குறிக்காது மாறாக சிலுவையில் அறிந்துக் கொல்லப்படுவதையே குறிக்கும். ஏனெனில் 'ஸலப' என்ற சொல் அரபி மொழியில், சிலுவையில் ஏற்றி எலும்பை முறித்தல் என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. எனவே இந்த வசனத்திற்கு 'வ மா சலபஹு' என்ற சொற்றொடர் சிலுவையில் அறையப்படவேயில்லை என்று பொருள் படாது மாறாக சிலுவையில் அறைந்து கொல்லபபடவில்லை என்ற பொருளையே தரும்.

அடுத்து இந்த வசனத்தில் காணப்படும் ஷுப்பிஹலஹும் என்ற சொற்றோடருக்குத் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர் இன்னொருவர் அவரைப்போன்று ஆக்கப்பட்டார் என்று பொருள் தருகின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது இலக்கணப்படி முற்றிலும் தவறானதேயாகும். இங்கு இன்னொருவரை நுழைக்க வழியேயில்லை 'ஷுப்பிஹலஹும்' என்ற சொற்றொடருக்கு அவர் அவ்வாறு (சிலுவையில் கொல்லப்பட்டவர் போன்று) ஆக்கப்பட்டார் என்றோ அது (அந்நிகழ்ச்சி) சந்தேகத்திற்குரியதாக ஆக்கப்பட்டது என்றோதான் பொருள் கொள்ளமுடியும்.

எனவே ஈசா(அலை) அவர்களுக்குப் பகரமாக இன்னொருவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்ற கூற்று அடிப்படையற்றதும் ஆதாரமற்றதும் ஆகும்.