இப்னு மர்யம் பற்றி அபூ அப்தில்லாவின் தவறான கருத்து


அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்.

திருக்குரானில் குறிப்பிடப்படும் எந்த நபியும் அவர் இன்னாரின் மகன் என்று குன்யத்துப் பெயரால் அல்லாஹ் அழைக்கவில்லை. ஈஸா (அலை) அவர்களை மட்டும் இப்னு மர்யம் என்று குன்யத்துப் பெயரால் இறைவன் அழைப்பதன் மர்மம் என்ன? சுமார் 2000 வருடங்களுக்கு முன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்ட அதே ஈசப்னு மர்யம் மீண்டும் உலகில் இறங்குவார் என்பதை மக்களுக்கு சந்தேகமற அறிவிக்கவே தனது திருமறையில் அவர்களைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஈசப்னு மர்யம் என்றே குறிப்பிடுகின்றான். 

உலக நடைமுறையில் ..... சொத்துக்கள் பதியப்படும் போது நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போதும் இன்னாரின் மகன் என்று குரிப்ப்டப்படுவதைப் பார்க்கிறோம். அதற்கு அடிப்படைக் காரணம் ஆள்மாறாட்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கே ஆகும். அதாவது இன்னாரின் மகன் இன்னார் என்று குறிப்பிட்டால் அது குறிப்பாக ஒரே ஒரு நபரைக் குறிக்கும் சொல்லாகும். இதன் காரணமாகவே முஹம்மது என்ற பெயரை மற்றவர்கள் வைத்துக் கொள்ள அனுமதித்த நபி (ஸல்) அவர்கள் தனது குன்யத்துப் பெயரான அபுல் காஸிம் என்ற பெயரை மற்றவர்களுக்கு வைப்பதைவிட்டும் தடுத்துள்ளார்கள். (ஆதாரம் புகாரி) 

உலக வரலாற்றில் யாரும் ஈஸா (அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் தந்தையின்றி தாய்க்கு மட்டும் பிறந்தவர் அல்லர். 

காதியானிகள் சொல்வதுபோல் ஈசப்னு மர்யத்தைப் போன்ற குணாதிசியங்கள் உடைய இந்த உம்மத்தில் தோன்றும் ஒருவர் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. காதியானிகள் நபியாக ஒப்புக் கொண்டிருக்கும் பொய் நபி (நவூது பில்லாஹ் மின் தாலிக்) மிர்ஸா குலாமின் தாயார் பெயர் மர்யம் என்று இருந்தாலும் கூட இவர் தந்தையின்றி பிறக்காத காரணத்தால் மிர்ஸா குலாமை இப்னு மர்யம் என்று ஒருபோதும் சொல்லமுடியாது

ஹாதிம் தாய், அப்லத்தூன், எலியா என்னும் பெயர்களில் இன்னார் மகன் இன்னார் என்ற குறிப்பு இல்லை. ஆதலால் இப்பெயர்களை இன்னொருவருக்கு உவமையாகச் சுட்டிக்காட்டி குறிப்பிடுவதால் தவறில்லை. ஆனால் இப்னு மர்யம் என்று ஒருவரை உவமையாகக் குறிப்பிடக் கூடாது. காரணம் இன்னாரின் மகன் இன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

நம் பதில் : 

இப்னு மர்யம் குறித்து அல்லாஹ் கூறும் போது இஸ்முஹுல் மஸீஹ் ஈசப்னு மர்யம் அவரின் பெயர் மஸீஹ் ஈசப்னு மர்யம் என்பதாகும் என்று 3:46 இல் கூறுகிறான். எனவே அல்லாஹ் அவருக்கு வைத்தக் முழுப் பெயரே மஸீஹ் ஈசப்னு மர்யம் என்பதாகும். அதன் ஒரு பகுதியைப் பிரித்து குன்யத்துப் பெயர் எனக் கூறி கற்பனைக் கதை புரியும் இவரை என்ன சொல்வது?

ஈசப்னு மர்யம் என்று குர்ஆனில் ஒரு சொல் வருகிறதென்றால் இறைவன் ஏன் இன்னாரின் மகன் இன்னார் என்று கூறினான் என்பதற்குரிய விடை குரானிலேயே இருக்கும் அல்லது ஹதீஸிலும் கிடைக்கும். அதைப் பற்றி ஆராயாமல் அபூ அப்தில்லாஹ் அச்சொல்லுக்கு தவறான ஒரு கருத்தை தந்துள்ளார். குர்ஆனில் எந்த நபியையும் அவர் இன்னாரின் மகன் இன்னார் என்று குன்யத்துப் பெயரால் குறிப்பிடாமல் ஈஸா (அலை) அவர்களை மட்டும் குறிப்பிடக் காரணம் என்ன? கிருஸ்தவர்கள் குரான் இறங்கும் கால கட்டத்தில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்றும் கடவுளின் குமாரன் என்றும் நம்பினர். எனவே அவர்களுடைய நம்பிக்கையை மறுக்கவே அவரை மர்யத்தின் மகன் ஈஸா என்று கூறுகிறது

இப்னு மர்யம் என்ற சொல் திருக்குரானில் 23 இடங்களில் வருகிறது. இவ்வாறு 23 முறை அல்லாஹ், ஈஸாவை மனித குமாரன், மர்யத்தின் மகன் என்று கூறுகிறான். 

குன்யத்து தொடர்பான நபிமொழியை காண்போம். அபூ அப்தில்லாஹ் அதற்க்கு எடுத்துக் காட்டும் தந்துள்ளதால் அதனை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன். 

முஹம்மது என்ற பெயரை பிள்ளைகளுக்கு சூட்டச் சொல்லிய ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுல் காசிம் என்ற குன்யத்துப் பெயரை பிறருக்கு சூட்டுவதைத் தடுத்திருக்கிறார்கள் என்றாலும் அதற்கு அவர் கூறும் காரணம் ஆள்மாறாட்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாகும். குன்யத்துப் பெயர் என்றால் அது ஒரே ஒரு ஆளை மட்டுமே குறிக்கும் என்று அபூ அப்தில்லாஹ் கூறுகிறார். அப்துல்லாஹ் என்பவருக்கு முஹம்மது என்ற ஒரு மகன் இருந்தால் அப்துல்லாஹ் வின் மகன் முஹம்மது. அதாவது முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று கூறினால் ஆள்மாறாட்டம் ஏற்படாதா? எனவே அபூ அப்தில்லாஹ் காட்டும் ஆதாரம் அர்த்தமற்றதாகும். இது பற்றிய ஹதீஸை காண்போம். 

என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள் ஆனால் (அபுல் காசிம் என்ற ஏன் குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 3537)

இதிலிருந்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காஸிமின் தந்தையாக இருப்பதனால் அபுல் காசிம் என்ற பெயரைச் சூட்டக் கூடாது என்ற பொருளில் கூறவில்லை. மாறாக காஸிம் அதாவது பங்கீடு செய்பவன் என்று தன்னை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளதால் அந்தப் பதவிப் பெயர் தனக்கு மட்டுமே உரியதால் அதனை பிறருக்கு வைக்க வேண்டாம் என்ற கருத்தில்தான் கூறியுள்ளார்கள். அபூ அப்தில்லாஹ் ஹதீஸைக் குறிப்பிடும் போது அரைகுறையாகக் குறிப்பிடுகிறார். அதிலேயே காணப்படும் கருத்தை மறைக்கிறார். 

உலக வரலாற்றில் ஈஸா (அலை) அவர்களை தவிர வேறு யாரும் தந்தையின்றி தாயாருக்கு மட்டுமே பிறந்தவர் அல்லர் என்ற கூறும் தகுதியும் ஞனமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அபூ அப்தில்லாஹ்வுக்கோ அல்லது வேறு எவருக்கும் அந்த தகுதி கிடையாது. ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மட்டும்தான் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். வேறு எவரும் அவ்வாறு பிறக்கவில்லை. இனிமேல் அவ்வாறு பிறக்கமாட்டார்கள் என்று குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை. எனவே ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் அல்லாமல் வேறு ஒருவர் மர்யம் என்னும் பெண்ணுக்கு பிறந்து, ஈஸா என்று பெயர் பெற்றிருந்தால் அவரை ஈசப்னு மர்யம் என்று கூறும் உரிமை எல்லாருக்கும் உண்டு. 

மேலும் ஒருவரை மற்றவருக்கு உவமையாக ஒப்பிட்டுக் கூறும்போது இவருடைய பெற்றோர் பெயரும் ஒன்றுபோல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இவ்விருவருக்கும் இடையில் எத்தனைப் பற்றி ஒப்பிட்டுக் கூறுகிறோமோ அது அவ்விருவருக்கும் இடையில் ஒன்றுபோல் இருந்தால் ஒப்பிட்டுக் கூறலாம். 

எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை இப்னு அபீகப்சா அதாவது அபீகப்சாவின் மகன் என்று அபூ ஸுப்யான் (ரலி) அழைத்தார்கள். (புகாரி) நபித்தோழர் அபூ ஸுப்யான் (ரலி)அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தந்தை தாய் பெயர் நன்றாக தெரியும் அபீகப்சா என்பவர் நபி (ஸல்) அவர்களின் தந்தை இல்லை என்பதும் தெரியும். இவ்வாறு இருந்தும் நபி (ஸல்) அவர்களை இப்னு அபீகப்சா என்று அபூ ஸுப்யான் (ரலி) அழைத்தார்கள். 

இதே விதத்தில்தான்  ஈஸா (அலை) அல்லாத வேறு ஒருவர் இப்னு மர்யம் என்று ஹதீஸில் அழைக்கப்பட்டுள்ளார். திருக்குரானில் மர்யத்தின் மகன் உவமையாக எடுத்துரைக்கப்ப்படும் போது உமது சமுதாயத்தினர் அதனைக் குறித்து கூச்சலிடத் தொடங்குகின்றனர். இவ்வசனத்தில் இப்னு மர்யத்தை உவமையாக எடுத்துக் கூறப்படும். என்று அல்லாஹ்வே கூறியுள்ளான். 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் இப்னு மர்யமாக வந்து விட்டார்கள் என்று கூறும்போது அபூ அப்தில்லாஹ் போன்றவர்கள் போடுகின்ற கூச்சலைத்தான் அல்லாஹ் அதில் கூறியுள்ளான். எனவே இன்னாரின் மகன் இன்னார் என்று பெயர்களை உவமையாகக் கூறக் கூடாது என்ற அபூஅப்தில்லாஹ்வின் கூற்று அர்த்தமற்றதாகி விடுகிறது. 

நபி மொழிகளில் இன்னாரின் மகன் இன்னார் என்று குன்யத்துப் பெயர்கள் ஒரு ஆளை மட்டும் குறிப்பிடுவதற்கோ ஆள் மாறாட்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கோ தந்தையின்றி தாய்க்கு மட்டும் பிறந்தவர் என்பதை மட்டும் குறிக்கவோ வரவில்லை. உதாரணமாக, ஹுதைபிய்ய உடன்படிக்கையில் அப்துல்லாஹ்வைன் மகன் முஹம்மது என்று எதிரிகள் எழுதச் சொன்னது முஹம்மது ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்பதை மறுப்பதர்க்காகத்தானேயொழிய ஆள் மாறாட்டம் ஏற்பட்டுவிடும் என்பதற்கல்ல. இதே விதத்தில் தான் ஈஸா கடவுளின் மகன் இல்லை. அவர் மர்யத்தின் மகன் ஆவார் என்று கிறித்தவ கடவுள் கொள்கையை மறுக்கவே இப்னு மர்யம் என்று கூறப்பட்டுள்ளது. 

இவ்விடத்தில் இன்னொரு கருத்தையும் விளக்க விரும்புகிறேன். அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பக்கம் 12 இல் 4:157 அல்லாஹ் ஷுப்பிஹலஹும் (அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது) என்று குறிப்பிடுகிறான் (காதியானிகளோ அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என பொருள் கொள்கின்றனர்) என்று எழுதியுள்ளார். அதாவது சிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா (அலை) இல்லை என்றும் யாரோ ஒரு அப்பாவி இரையாக்கப்பட்டான் என்றும் அபூ அப்தில்லாஹ் நம்புகிறார். 

இதற்க்கு நபிமொழி வரலாற்று சான்றுகள் எதுவும் தரவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும். குன்யத்துப் பெயர் பற்றி அபூ அப்தில்லாஹ் மேலே எழுதியிருப்பதில் ஆள்மாறாட்டம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்குத்தான் அல்லாஹ் ஈசப்னு மர்யம் என்று – இன்னாரின் மகன் இன்னார் என்று பெயர் வைத்துள்ளான். என்று பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார். அதாவது ஆள் மாறாட்டம் ஏற்படுவதை ஒரு சொல்லின் மூலம் அல்லாஹ் தடுத்துவிட்டான் என்கிறார் அவர். 

அல்லாஹ் ஆள்மாறாட்டம் ஏற்படக் கூடாது என்று கருதியே ஈசப்னு மர்யம் என்று குன்யத்துப் பெயர் வைத்தான் என்று நம்பும் அபூ அப்தில்லாஹ், அல்லாஹ் தன் செயல் மூலம் ஆள்மாறாட்டம் செய்வான். என்றும் அதனை ஷுப்பிஹலஹும் (அவர்களுக்கு ஆள் மாறாட்டம்) செய்யப்பட்டது என்ற சொல் விளக்குகிறது என்றும் நம்புவது முரண்பாடாக இல்லையா? 

ஆள்மாறாட்டம் என்பது உலகில் எத்தனை பெரிய குற்றம். அவமானம், தலை குனிவு, அச் செயலை அல்லாஹ் செய்துள்ளான் என்று நம்பும் அபூ அப்தில்லாஹ்களை அல்லாஹ்தான் மன்னிக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு இதனை விட அவமானும் களங்கமும் கேவலமும் (நவூதுபில்லாஹ்) இருக்கமுடியுமா? 


அச்சொல்லுக்கு அவருடைய நிலைமை சந்தேகத்திற்கு உரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது, என்று மௌதூதியும் அவர்கள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டனர் என்று அப்துல் ஹமீது பாக்கவியும் நாங்கள் கொண்ட பொருளையே கொண்டுள்ளனர். இதுவே சரியான பொருள் அல்லது “But he was made to appear to them as such” – (Mohammed Ali) என்று பொருள் கொள்ளலாம்.

சிலுவை சம்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா?


சிலுவை சம்பவத்தின் போது ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொல்ல முயன்றபோது, இறைவன் அவர்களைக் காப்பாற்றுவதற்காக வேறொரு நபருக்கு ஈசாநபி (அலை) அவர்களின் உருவத்தைக் கொடுத்தான் என்றும் அந்த நபரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால் திருகுரானிலோ, நம்பகமான நபிமொழிகளிலோ இந்தக் கருத்துக்கு எந்தச் சான்றும் இல்லை. என்றாலும் அந்தக் காலத்து திருக்குர்ஆன் விரிவுரையாளரான தபரி முதல் இந்தக் காலத்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளரான ஆ. கா . அப்துல் ஹமீது பாகவி வரை பல்வேறு விரிவுரையாளர்களும். மொழி பெயர்ப்பாளர்களும் தம்முடைய நூல்களில் இந்தக் கட்டுக் கதையை கூறியுள்ளனர்.

இந்தக் கதை, ஆரம்பகாலத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறிய யூதர்களாலோ, கிறிஸ்தவர்களாலோ புனையப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் இந்தக் கதையை கூறுகின்றவர்கள் எல்லாம் இந்தக் கதைக்கு அறிவிப்பாளர்களாக மதம் மாறிய யூதர்களையோ, கிறித்தவர்களையோதான் குறிப்பிடுகின்றனர். தபரி என்ற திருக்குர்ஆன் விரிவுரையாளர் ஈசா நபிக்கு பகரமாக இன்னொருவர் சிலுவையில் அறையபெற்றார் என்ற கூற்றுக்கு அறிவிப்பாளராக ஹைப் என்ற யூதரையே குறிப்பிட்டுள்ளார். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்கள் தமது பதினேழு சீடர்களுடன் ஓர் அறையில் இருந்ததாகவும் அதில் ஒருவர் ஈசா நபி போல் இறைவனால் உருமாற்றப்பட்டதாகவும். அவரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றதாகவும் இந்த வஹப் கூறியுள்ளார்.

இந்தக் கட்டுக்கதை தோன்றுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை தழுவிய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும்,

...... அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை சிலுவையில் அறைந்துகொள்ளவுமில்லை......." (4:158) 

என்ற திருக்குர்ஆன் வசனம் புரியாத புதிராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டது நடந்தேறிய ஒரு உண்மை நிகழ்ச்சி. ஆனால் திருக்குரானோ ஈசா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்று கூறுகிறது. இந்தப் புதிருக்கு விடையாக மேற்கண்டகட்டுக்கதையை இவர்கள் புனைந்து கூறியுள்ளனர். சிலுவை சம்பவம் உண்மையில் நிகழ்ந்த ஓன்று. ஆனால் அறியப்பட்டது ஈசா நபி அல்ல. மாறாக அவர்களின் உருவத்தைப் பெற்ற இன்னொருவரே என இவர்கள் கூறினார். 

ஈசா நபிக்குப் பகரமாக அப்பாவியான இன்னொருவர் சிலுவையில் பலியிடப்பட்டாரா? ஈசா நபியை காப்பாற்ற இந்த நியாயமற்ற செயலை இறைவன் செய்தானா? என்ற கேள்வி சிந்திக்கின்ற எவருக்கும் எழும். 

இப்படிப்பட்ட கேள்விகள் எழுமே என்ற எண்ணம் இந்தக் கதையைப் புனைந்தவர்களுக்கும் ஏற்பட்டிருக்கவேண்டும். இதற்காக இன்னொரு துணைக் கதையையும் கூறியுள்ளார்கள். க அதா என்பவரின் கூற்றை ஆதாரமாகக் காட்டி தபரி கீழ்வருமாறு கூறுகிறார்:

"மரியமின் மகன் ஈசா நபி(அலை) அவர்கள் தங்களின் தோழர்களை நோக்கி எனது தோற்றத்தைப் பெற்று சிலுவையில் கொல்லப்பட உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்க்கு அவர்களில் தோழர்களில் ஒருவர் இறைவனின் தூதுவரே, நான் அதற்குத் தயார் என்று பதில் அளித்தார். இவ்வாறு அந்த நபர் கொல்லப்பட்டார் இறைவன் தனது தூதரைப் பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக்கொண்டான். (தி முஸ்லிம் வேர்ல்ட் வால்யும்70 எண், 2 பக்கம் 97 ) 

இப்னு இஷ்ஹாக் என்பவரும் தமது வரலாற்று நூலில் இந்த ஆள்மாறாட்ட கதையைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பலியானவர் ஈசா நபியின் தோழர்களில் ஒருவரன்று, மாறாக சர்கஸ் என்பவரே எனக் கூறுகின்றார். இதே இப்னு இஷ்ஹாக் இன்னோரிடத்தில் பலியானது யூதாஸ் எனக்குறிப்பிட்டு அதற்கு அறிவிப்பாளராக கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒருவரைக் கூறுகிறார். ஈசா நபியைப் பிடிக்க வந்த டி டியானஸ் என்பவரே சிலுவையில் பலியானார் என்று கூறுபவர்களும் உண்டு.

எது எப்படி இருப்பினும், இறைவன், ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவர்களின் தோழர்களில் ஒருவருக்கே எதிரிகளில் ஒருவருக்கோ ஈசா நபி அவர்களின் உருவத்தைக் கொடுத்து அந்த நபரையே சிலுவையில் மரணிக்கச் செய்தான் என்ற கூற்று சிந்திக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறைவன் இந்த நியாயமற்ற செயலை செய்தான் என்று இந்த ஆள் மாறாட்ட நாடகத்தை அரங்கேற்றினான் என்றோ கூறுவது அந்த இறைவனின் தூய தன்மைக்குக் களங்கம் கற்பிப்பதாகும். 

ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கு முன்னால் தோன்றிய நபிமார்களுக்கு இன்னல்கள் இடுக்கண்கள் ஏற்படாமல் இருக்கவில்லை. அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருந்ததுமில்லை. 

ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்கள், அவர்களின் எதிரிகளால் நெருப்புக்குழியில் போடப்பட்டார்கள். அந்த ஆபத்தை அவர்களே சந்தித்தார்கள். அல்லாஹ் அவர்களை அந்த நெருப்புக் குழியிலிருந்து அற்புதமாகக் காப்பாற்றினான். அதுபோல ஹஸ்ரத் மூஸா(அலை) பிரௌனின் பிடியிலிருந்து காப்பாற்றினான். ஹஸ்ரத் யூனுஸ்(அலை) அவர்கள் கப்பலிலிருந்து கடலில் தள்ளப்பட்ட ஒரு மீனால் விழுங்கப்பட்ட நிலையிலும் இறைவன் அவர்களைக் காப்பாற்றினான். ஹஸ்ரத் யூசுப்(அலை) அவர்கள் சிறுவராக இருந்தபோது அவர்களின் சகோதரர்களாலேயே கிணற்றில் தள்ளப்பட்டார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட அந்த தருணத்தில் இறைவன் அவர்களை ஒரு பயணக்குழு மூலம் காப்பாற்றினான். 

இந்த நபிமார்கள் எல்லாம் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துகளை அவர்களே நேரிடையாகச் தந்தித்தார்கள் . இறைவன் அவர்களைத் தனது வல்லமையால் காப்பாற்றி மீண்டும் மக்கள் முன்னால் உலவச் செய்தான். 

அவ்வாறே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் அவர்களே அந்த ஆபத்துகளை சந்திக்க வைத்து அவற்றிலிருந்து இறைவன் காப்பாற்றினான்.

இவ்வாறிருக்க, ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அவர்களுக்குப் பகரமாக இன்னொருவரை அந்த ஆபத்தில் மாட்டி விட்டு ஈசா நபி அவர்களை இறைவன் உயர்த்திக் கொண்டான் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? இத்தனை நபிமார்களுக்கு ஒரு நீதி, ஈசா நபி அவர்களுக்கு மட்டும் தனி நீதியா? 

உண்மையில், ஈசா நபி அவர்களும் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை அவர்களே சந்தித்தார்கள். அவர்களே சிலுவையில் அறையுண்டார்கள். ஆனால் இறைவன் ஏனைய நபிமார்களை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியது போன்று ஈசா நபி அவர்களையும் சிலுவையிலிருந்து காப்பாற்றினான். அவர்கள் அதில் மரணமடையாது உயிர்தப்பினார்கள். 

ஈசா நபி அவர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள், ஆனால் அவர்கள் அதில் இறக்கவில்லை. இறைவன் அவர்களை அந்த மோசமான மரணத்திலிருந்து காப்பாற்றினான். என்ற புதிய கருத்தை - பகுத்தறிவு ஏற்கின்ற கருத்தை அஹ்மதியா ஜமாத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களே உலகுக்கு எடுத்துரைத்தார்கள்.

இந்தக்கருத்து திருக்குர்ஆன் வசனங்களுக்கோ, நபிமொழிகளுக்கோ எவ்வகையிலும் முரண்படவில்லை.

சிலுவை சம்பவம் தொடர்பான திருக்குர்ஆன் வசனத்தில் அதாவது 4:158 ஆம் வசனத்தில் 'ஸலப' என்ற சொல் காணப்படுகிறது இது வெறுமனே சிலுவையில் அறையப்படுவதை குறிக்காது மாறாக சிலுவையில் அறிந்துக் கொல்லப்படுவதையே குறிக்கும். ஏனெனில் 'ஸலப' என்ற சொல் அரபி மொழியில், சிலுவையில் ஏற்றி எலும்பை முறித்தல் என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. எனவே இந்த வசனத்திற்கு 'வ மா சலபஹு' என்ற சொற்றொடர் சிலுவையில் அறையப்படவேயில்லை என்று பொருள் படாது மாறாக சிலுவையில் அறைந்து கொல்லபபடவில்லை என்ற பொருளையே தரும்.

அடுத்து இந்த வசனத்தில் காணப்படும் ஷுப்பிஹலஹும் என்ற சொற்றோடருக்குத் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர் இன்னொருவர் அவரைப்போன்று ஆக்கப்பட்டார் என்று பொருள் தருகின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது இலக்கணப்படி முற்றிலும் தவறானதேயாகும். இங்கு இன்னொருவரை நுழைக்க வழியேயில்லை 'ஷுப்பிஹலஹும்' என்ற சொற்றொடருக்கு அவர் அவ்வாறு (சிலுவையில் கொல்லப்பட்டவர் போன்று) ஆக்கப்பட்டார் என்றோ அது (அந்நிகழ்ச்சி) சந்தேகத்திற்குரியதாக ஆக்கப்பட்டது என்றோதான் பொருள் கொள்ளமுடியும்.

எனவே ஈசா(அலை) அவர்களுக்குப் பகரமாக இன்னொருவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்ற கூற்று அடிப்படையற்றதும் ஆதாரமற்றதும் ஆகும்.

இரு ஈஸா நபிமார்களின் இரு வேறு தோற்றங்கள்.


ஹதீஸ்களிலும் காதியானிகள் கை வரிசை என்ற எனும் தலைப்பில் பக்கம் 56 இல் கூறுகிறார் நான் ஈஸாவையும், மூஸாவையும் கண்டேன். ஈசா சிவந்த நிறமும் சுருண்ட கேசமும், விரிவடைந்த நெஞ்சமும் உடையவராக இருந்தார். (புகாரி பாகம் 2, கிதாபு பத் உல்கல்க்) 

நான் ஒரு தரிசனத்தில் கஹ்பாவை வலம் வருவது போல் கண்டேன். அப்போது திடீர் என்று ஒருவர் என் முன் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான கேசமும் கொண்டிருந்தார். இவர் யார் என கேட்ட பொது இவர் இப்னு மர்யம் என்று கூறப்பட்டது. (புகாரி கிதாபுல் பிதன்)

............ஜக்து என்ற பதத்திற்கு சுருண்ட கேசம் என்பது மட்டும் பொருளல்ல. உறுதியான உடம்பிற்கும் ஜக்து என்று சொல்லலாம்.ஆனால் அது தனியாக ஜக்து என்று மட்டும்கூறப்பட்டிருப்பதால் சுருண்ட கேசம் என்று மட்டும் பொருள் கொள்ள முடியாது. ஜக்து என்ற சொல்லுடன் க்ரு என்ற சொல் இணைக்கப்பட்டு ஜக்துக்ரு என்று கூறப்பட்டிருந்தால் மட்டுமே சுருண்ட கேசம் என்று மட்டும் பொருள் கொள்ள முடியும். குறிப்பிட்ட அந்த ஹதீஸில் ஜக்துக்கு முன்னாள் சிவந்த மேனி என்றும் ஜக்துக்கு பின்னால் அகன்ற நெஞ்சு என்றும் உடலின் அமைப்பைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் மத்தியில் உள்ள ஜக்து என்ற சொல்லுக்கு உறுதியான உடல் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. என்று அபூஅப்தில்லாஹ் எழுதுகிறார்.

நம் பதில்:

1. ஒரு வாதத்திற்காகக இந்த புளுகு மூட்டையை ஏற்றுக் கொண்டாலும் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மத் (ரஹீ) அவர்கள் இரு நபிமார்களுடைய தோற்றத்தை மட்டும் குறிப்பிட்டு எழுதவில்லை. என்பதைக் கவனித்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. முதலாவது ஹதீஸில் ஈஸா நபி (அலை) அவர்களை மூஸா நபி (அலை) அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து அந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டவர் மூஸா நபியுடன் தொடர்புள்ள மஸீஹ் என்பது புலனாகிறது. இரண்டாவதாகக் கூறப்பட்ட மஸீஹ் பிற்காலத்தில் தோன்றுபவர் என்பதற்கு ஆதாரமாவது, அந்த ஹதீஸை தொடர்ந்து வரும் வாசகங்களில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தஜ்ஜாலின் குழப்பம்மிகுந்த காலத்தில் தோன்றுவார் எனக் கூறப்பட்டிருப்பதேயாகும். 

2. இப்னு மர்யம் தோன்றும் போது உங்களுடைய நிலைமை எவ்வாறு இருக்குமோ? அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாம்மாக இருப்பார். (புகாரி முஸ்லிம் : நுஸுலிப்னு மர்யம்) எனும் நபி மொழியைக் கூறி உங்களிலிருந்து தோன்றி, உங்களுக்கு இமாமாக இருப்பார் என்று இந்த நபிமொழியில் வந்திருப்பதால் இதில்கூறப்பட்டிருப்பவர் முஸ்லிம்களிலிருந்தே தோன்றும் ஒருவர் என்பதை உறுதி செய்கிறது. 

3. உங்களுள் உயிருள்ளவர் ஈஸப்னு மர்யமைச் சந்திப்பார் அவர் மஹ்தியாகவும் தீர்ப்புவழங்குபவராகவும். நீதியை நிலைநாட்டுபவராகவும் விளங்குவார். (முஸ்னது அஹ்மதிப்னு ஹம்பல் – பாகம் 2, பக்கம் ) 

4. ஈசாவை தவிர மஹ்தி இல்லை. (இப்னு மாஜா ஷித்ததுஸ் ஸமான்)

5. இதன் காரணமாகவே இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களும் தத்தமது ஹதீஸ் தொகுப்புகளில் இப்னு மர்யமின் வருகையைப் பற்றியும் இமாம் மஹ்தியைப் பற்றியும் தனித்தனியாக வெவ்வேறு அத்தியாயங்கள் அமைத்து குறிப்பிடாமல் ஒன்றாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலே குறிப்பிட்ட ஐந்து ஆதாரங்களையும் அபூ அப்தில்லாஹ் வழக்கம்போல் பதில் தரவில்லை. 

ஜக்து என்ற சொல்லை ஆராயப் புறப்பட்ட அபூ அப்தில்லாஹ் இப்னு மர்யம் ஒரு நபிமொழியில் மூஸா (அலை) அவர்களுடனும் இன்னொரு நபி மொழியில் தஜ்ஜால் மற்றும் கஹ்பதுல்லாஹ்வுடனும் வருவதால் ,ஒருவர் இஸ்ரவேலர்களுக்காக வந்த ஈஸா(அலை) என்றும் மற்றொருவர் கஹ்பதுல்லாவுடன் தொடர்புடையவர் என்றும் பிரித்தறியதவறியது ஏன்? ஜஅது என்பதற்கு உறுதியான உடல் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது அண்டப் புழுகேயாகும். ஏனெனில் Islamic Universiy Madina – வின் Dr.Momammad Muhsin Khan ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள Sahih Bukhari Arabic English மொழியாக்கத்தில் பாகம் – 4 பக்கம் – 432-433 ஹதீஸ் எண் 648-649 இல் ஜஅது என்ற சொல்லுக்கு Curly Hair (சுருண்ட முடி) என்றே மொழி பெயர்த்துள்ளார்கள். தொடர்ந்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹதீஸ் எண் 650இல் இரண்டு மஸீஹுகளைக் குறிப்பிட்டு ஒன்று ஸப்துஷ் – அர் இன்னொன்று ஜஅதுஎன வந்துள்ளது. அதாவது ஒருவர் நீளமான முடியுடையவரும் இன்னொருவர் சுருண்ட முடியுடையவரும் ஆவார் என்றே கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழில் வெளிவந்த புகாரி மொழிபெயர்ப்பிலும் ஜஅத் என்ற சொல்லுக்கு சுருள் முடி உடையவர் என்ற மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.(ஆதாரம் புகாரி -3438)